பள்ளி விடுமுறைக் காலமான மார்ச் 14 முதல் மார்ச் 24 வரை இரு நிலவழிச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில், தற்போதைய கனமழையால் அது மோசமடைந்துள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது வெள்ளிக்கிழமை (மார்ச் 21) ஃ|பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சிங்கப்பூர், ஜோகூரில் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மார்ச் 21ஆம் தேதிவரை கனமழை பெய்யலாம் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜோகூருக்கு கார், மோட்டார்சைக்கிள் மூலம் பயணம் செய்வோர் குடிநுழைவுச் சோதனையை தாண்டிச் செல்ல இரண்டு மணிநேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதாக ஆணையம் கூறுகிறது.
இந்த வார இறுதிவரை போக்குவரத்து அதிகமாகவே இருக்கும் என்ற ஆணையம், அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது பற்றிய ஆகக் கடைசி தகவலாக வெள்ளிக்கிழமை காலை 9.22 மணிக்கு தனது பதிவில் ஆணையம், ஜோகூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து கடுமையாக இருப்பதாகத் தெரிவித்தது.
மேலும், ஜோகூர் செல்லும் வாகனவோட்டிகள், வானிலை மந்தமாக இருப்பதாலும் கடந்த இரண்டு நாள்களாக நிகழ்ந்த சாலை விபத்துகள் காரணமாகவும், வரிசையை முந்திக்கொண்டு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஜோகூருக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவோர், போக்குவரத்து நிலவரத்தைக் கருத்தில்கொண்டு பயணம் மேற்கொள்ளுமாறும் காலதாமதத்தை எதிர்பார்க்கும்படியும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.