பூன் லே வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் 22வது மாடியிலிருந்து சிறுவன் ஒருவன் பூனையை வீசுவதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வந்ததை அடுத்து, அதுகுறித்து விலங்கு மருத்துவச் சேவை விசாரணை நடத்தி வருகிறது.
"இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு முன் வெறும் ஊக அடிப்படையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். முறையான விசாரணை நடக்க வேண்டும்," என்று விலங்கு மருத்துவச் சேவையின் குழும இயக்குநர் ஜெசிக்கா குவோக் தெரிவித்தார்.
மின்தூக்கி கதவு திறந்ததும் அதிலிருந்து ஒரு கறுப்புப் பூனை வெளி வருவதையும் அதைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் வெளிவருவதையும் அந்த ஒரு நிமிட காணொளி காட்டியது.
சில வினாடிகள் கழித்து, அச்சிறுவன் அந்தப் பூனையைத் தூக்கி 22வது மாடியிலிருந்து கீழே வீசுவதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
சிறிது நேரம் கழித்து, பெரும் சத்தம் ஒன்று காணொளியில் கேட்க முடிந்தது.
இந்த விவகாரம் குறித்து புகார் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்யயவோ தடுத்து வைக்கவோ இல்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தேசிய பூங்காக் கழகத்தின் ஒரு பகுதியான விலங்கு மருத்துவச் சேவை, செல்லப் பிராணிகள் கொடுமைப்படுத்தப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று திருவாட்டி குவோக் தெரிவித்தார்.
விலங்கு துன்புறுத்தல் குற்றத்தை முதல்முறை புரிபவர்களுக்கு 18 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, $15,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

