மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளிய பெண்ணுக்கு முதலுதவி அளித்து உயிர்காத்த ‘ஃபுட்பாண்டா’ உணவு விநியோக ஊழியருக்குப் ‘பரிவுமிக்க பயணி விருது’ வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி, திரு பிரசிவன் குமரன் தமது குடும்பத்தினருடன் லிட்டில் இந்தியா எம்ஆர்டி ரயில் நிலையத்தில் இருந்தார். அப்போது, கட்டணக் கதவுகளுக்கு வெளியே பெண் ஒருவர் தரையில் மயங்கி விழுந்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்ததை அவர்கள் கண்டனர்.
அப்பெண்ணைச் சுற்றிப் பொதுமக்கள் கூடியிருந்தனர். தாதியாகப் பணியாற்றும் திரு பிரசிவனின் மனைவி, அப்பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்துள்ளதை அடையாளம் கண்டார்.
முதலுதவிச் சிகிச்சையில் பயிற்சி பெற்றவரான திரு பிரசிவன், அப்பெண்ணின் கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையிலான நரம்புகளைத் தளர்த்திவிட உதவினார்.
இதைத் தொடர்ந்து, 26 வயது திரு பிரசிவனும் எஸ்பிஎஸ் டிரான்சிட் ரயில் நிலைய ஊழியர்களும் இணைந்து, சக்கர நாற்காலியின் உதவியுடன் அப்பெண்ணை ஏறத்தாழ 50 மீட்டர் தொலைவில் இருந்த பயணிகள் சேவை நிலையத்தின் ஓய்வறைக்குக் கொண்டு சென்றனர்.
ஆம்புலன்சுக்காக காத்திருந்தபோது, அப்பெண்ணின் உடல் குளிர்ந்து போயிருப்பதைக் கவனித்த திரு பிரசிவன், அவரது உள்ளங்கைகளையும் கால்களின் பாதத்தையும் தேய்த்துவிட்டு வெப்பத்தை ஏற்படுத்தினார்.
அத்துடன், அவர் மீண்டும் நினைவு திரும்புவதற்காகக் கழுத்துப் பகுதியில் அழுத்தம் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வரும் வரை அவர் அப்பெண்ணுடனேயே இருந்து கவனித்துக்கொண்டார்.
முதலுதவி அளிப்பவரான தாம், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ‘மைரெஸ்பாண்டர்’ செயலி வழியாக வரும் அவசர உதவி அழைப்புகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து உதவுவதாகத் திரு பிரசிவன் தெரிவித்தார்.
இவ்வாறு மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பேருக்குத் தாம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், ‘பரிவுமிக்க பயணி வாரம் 2026’ஐ முன்னிட்டு, பீஷான் ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் நவம்பர் 21ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பொதுப் போக்குவரத்தில் சக பயணிகளுக்கு உதவியதற்காகவும் பண்பான நடத்தையை ஊக்குவித்ததற்காகவும் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோவிடம் இருந்து திரு பிரசிவன் பாராட்டு விருதைப் பெற்றுக்கொண்டார்.
