அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் திட்டங்களில் ஏற்படும் பின்னடைவுகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் செயல்படும் மாணவர்களை அங்கீகரிக்க உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ‘தளராத மாணவர்’ விருதை (Undaunted Student Award) அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கணித, அறிவியல் உயர்நிலைப் பள்ளி, நன்யாங் தொடக்கக் கல்லூரி, சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 14 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் அனீஷ் போண்டுகுலாவின் திட்டமும் கவனத்தை ஈர்த்தது.
அவருக்கு $4,000 ரொக்கப் பரிசும், உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பில் பயிற்சி வாய்ப்பும் கிடைக்கும்.
2024 ஆம் ஆண்டு ஏ*ஸ்டார் அமைப்பில் மாணவர் பயிற்சி பெற்றதும், முதியோர் கருணை இல்லத்தில் தொண்டூழியம் செய்ததும் அனீஷுக்குப் புதிய உந்துதலை அளித்தன.
அதன் அடிப்படையில், புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சிகிச்சை பலனளிக்குமா என்பதைக் கணிக்கும் ஒரு புதிய மாதிரியை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
கட்டிகளின் படங்கள், மரபணு, மருத்துவத் தரவுகளை ஒருங்கிணைத்து அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.
தொடக்கத்தில், அனீஷ் குழு பயன்படுத்திய பழைய தரவுகளில் நோயாளிகளின் முந்தைய சிகிச்சைகள் போன்ற போதிய தகவல்கள் இல்லை என்ற பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
எனினும், அவர் மனம் தளராமல் அனைத்துலக வழிகாட்டிகளின் உதவியுடன் புதிய ஆசியத் தரவுகளைத் தேடிப் பெற்று, மூன்று மாதங்களில் தனது மாதிரியை அனீஷ் வெற்றிகரமாகப் பயிற்றுவித்தார்.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியம் என்றும், ஒரு பின்னடைவுக்காகக் குறிக்கோளைக் கைவிடக் கூடாது என்றும் அவர் திடமாகக் கூறினார்.
வருங்காலத்தில் சிறந்த மருத்துவ மாணவராக உருவாகி, மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளுக்கு உதவக்கூடிய நம்பகமான மாதிரி ஒன்றை உருவாக்குவதே அனீஷின் இலக்காகும்.
அனீஷ் உட்பட ஐந்து பேருக்கு உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ‘தளராத மாணவர்’ விருதை வழங்கியது.
