அடித்தளத் தலைவராக ராடின் மாஸ் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த அப்துல் காதர், 54, சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகளைத் தொண்டூழியர் என்ற முறையில் ஏற்பாடு செய்து கொடுப்பதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்.
“இந்தக் கைதிகளில் பலர் சரியாக வேலைக்குப் பாேகாமல் இருந்திருப்பார்கள் அல்லது அவர்கள் சிறுசிறு வேலைகளை மட்டுமே செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் சிறைக்குச் செல்லும்போது அடிப்படைத் தேவைகளுக்குத் திண்டாடி அவமானப்படுவது அவர்களது குடும்பத்தினர் என்பதை அனுபவ ரீதியாகக் காண்கிறேன்,” என்று திரு காதர் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளாக இவ்வாறு சேவையாற்றிய திரு காதருக்கு சனிக்கிழமை (நவம்பர் 16) விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் சிறைத்துறையும் ‘சானா’ எனப்படும் சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புச் சங்கமும் நடத்திய மஞ்சள் நாடா சமூகப் பணித்திட்ட பாராட்டு மற்றும் மதிய உணவு நிகழ்ச்சியில் திரு காதரைப் போன்ற தொண்டூழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் அடித்தளத் தலைவர்களை அங்கீகரிக்கும் இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூர் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். நிகழ்ச்சியின்போது அடித்தளப் பிரிவுகளுக்கு 28 விருதுகளும் தனிநபர்களுக்கு 292 விருதுகளும் வழங்கப்பட்டன.
மஞ்சள் நாடா திட்டத்தின் 20ஆம் ஆண்டு நிறைவுக்கு தம் வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் சீ, சிறைவாசம் இருந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதற்கான சமூக ஆதரவை அத்திட்டம் வெற்றிகரமாகத் திரட்டியுள்ளதாகவும் கூறினார்.
இத்திட்டத்தின் விரிவாக்கம் பற்றியும் திரு சீ பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“மளிகைப் பொருள்களுக்கும் அன்றாட உதவிப் பொருள்களுக்குமான வருடாந்தரத் தொகை, ஒரு குடும்பத்திற்கு 80 வெள்ளியிலிருந்து 150 வெள்ளிக்கு உயர்த்தப்படும்,” என்றார் அவர்.
அத்துடன், ஐந்து வயதுக்கும் குறைவான பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு 150 வெள்ளி அத்தியாவசிய பிள்ளைப் பருவ உதவித்திட்டம் ஒன்று புதிதாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொண்டூழியர் குழுவான ‘ஹார்ட்வார்மர்ஸ்’ (heartwarmers), சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கான ஆதரவு நிதியம், மஞ்சள் நாடா சமூகத் திட்ட நிதியம் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மஞ்சள் நாடா சமூகத் திட்டத் தொண்டூழியர்களின் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு வசதியும் வழிகாட்டுதலும் ஏற்படுத்திக் கொடுக்கும் வளர்ச்சி வரைவுத் திட்டம் ஒன்றும் உருவாக்கப்படும்.
மஞ்சள் நாடா சமூகத் திட்டத்துக்கான இணையவாசல் ஒன்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.