மரினா பே சேண்ட்சில் உள்ள சேண்ட்ஸ் கிராண்ட் பால்ரூமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற 29வது ‘சிங்கப்பூர் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் சங்க’த்தின் விருது வழங்கும் விழாவில், சிங்கப்பூர் பாடகர்களும் பாடலாசிரியர்களுமான டிக் லீ, ஜேஜே லின் இருவரும் முக்கிய வெற்றியாளர்களாகத் திகழ்ந்தனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் வழங்கப்பட்ட பல விருதுகள், பாடல்கள் மூலம் ஈட்டப்பட்ட காப்புரிமை வருவாய் அடிப்படையில் அமைந்தன.
ஒரே பிரிவில் மூன்று முறை வெற்றி பெற்ற பாடல்களின் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் வழங்கப்படும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் புதிய விருதை லீயும் லின்னும் முதன்முறையாகப் பெற்றனர்.
இந்தச் சிறப்பு அங்கீகாரம் பெற்ற பாடல்கள், எதிர்காலத்தில் அதே பிரிவில் மீண்டும் விருது பெறத் தகுதிபெறாது.
1998, 2004ஆம் ஆண்டுகளின் தேசிய தின அணிவகுப்புகளில் மிகவும் விரும்பப்பட்ட ‘ஹோம்’ என்னும் கருப்பொருள் பாடலுக்காக லீ விருது பெற்றார்.
அதேவேளை, லின் தமது 2014ஆம் ஆண்டின் ‘ஜெனிசிஸ்’ இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ‘கே ஸி மெய் ரு குவோ’ பாடலுக்காக விருதை வென்றார்.

