நீடித்த நிலைத்தன்மையில் அக்கறையுள்ள இளையர்கள்

நீடித்த நிலைத்தன்மையில் அக்கறையுள்ள இளையர்கள்

2 mins read
ce3ad548-6ab3-4b7b-a741-fb488eff8cc3
நீடித்த நிலைத்தன்மைக்கான இளைய தலைவர்கள் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் விருதுபெற்ற 28 மாணவர்களோடு அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: விஷ்ருதா நந்தகுமார்

தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் நீடித்த நிலைத்தன்மைக்கான இளைய தலைவர்கள் திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் 28 மாணவர்கள் விருது பெற்றனர்.

அத்திட்டத்தை முடிக்கும் மூன்றாவது பட்டதாரிக் குழுவுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலாங் வேவ் கடைத்தொகுதியில் விருதுகள் வழங்கப்பட்டன.

அத்திட்டத்திற்கான நிதியுதவி 20 விழுக்காடு உயர்த்தப்பட்டு, 5,000 வெள்ளியிலிருந்து 6,000 வெள்ளியாக அதிகரிக்கும் என்று விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அறிவித்தார்.

புதிதாகச் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் அத்திட்டத்தில் இணைகிறது.

2023ல் அறிமுகமான அத்திட்டம், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் திட்டங்களை முன்னின்று நடத்துவதற்கான திறன்களை இளையர்களுக்கு வழங்குகிறது.

சுற்றுப்புற விவகாரங்களின்மீது இளையர்களின் நாட்டத்தைத் தூண்டும் வகையிலும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சிகள், பயிலரங்குகள் மூலம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நீடித்த நிலைத்தன்மை சார்ந்த திட்டங்கள் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.

அக்கண்காட்சிகளை காலாங் வேவ் கடைத்தொகுதியில் ஜூலை 10 முதல் 12ஆம் தேதிவரை, காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் காணலாம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விருது பெற்றவர்களில் ஒருவரான தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி சொஹானா காட்டுன் உருவாக்கியுள்ள ‘உங்கள் கழிவை அணியுங்கள்’ (Wear Your Waste) திட்டமும் அவற்றில் ஒன்று.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவிடமிருந்து விருதைப் பெற்ற சொஹானா காட்டுன், 23.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவிடமிருந்து விருதைப் பெற்ற சொஹானா காட்டுன், 23. - படம்: விஷ்ருதா நந்தகுமார்
கண்காட்சியில் ‘உங்கள் கழிவை அணியுங்கள்’ (Wear Your Waste) திட்டத்தை அமைச்சர் ஃபூவிடம் விளக்கும் சொஹானா காட்டுன்.
கண்காட்சியில் ‘உங்கள் கழிவை அணியுங்கள்’ (Wear Your Waste) திட்டத்தை அமைச்சர் ஃபூவிடம் விளக்கும் சொஹானா காட்டுன். - படம்: விஷ்ருதா நந்தகுமார்

பயன்படுத்தப்பட்ட காப்பிக் கொட்டைகளையும் நெகிழி போத்தல் மூடிகளையும் கொண்டு ஆபரணங்களைத் தயாரிக்க அத்திட்டம் கற்றுத் தருகிறது. அத்திட்டத்தின்கீழ் குறிப்பாக, உடற்குறையுள்ளோருக்கும் சிறப்புத் தேவையுடையோருக்கும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

“அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள்களைப் பயனுள்ள வழியில் மறுபயனீடு செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் 23 வயது சொஹானா காட்டுன்.

சமூக சேவை அமைப்புகள், நிறுவனங்கள், பசுமைக் குழுக்கள், பள்ளிகள் போன்ற பல பங்காளிகளோடு இணைந்து நடத்தப்படும் அப்பயிலரங்கள், மறுபயனீட்டுடன் நடைமுறைத் திறன்களையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் வளர்க்கின்றன.

அத்திட்டத்தின் நான்காவது குழுவிற்கு இதுவரை இல்லாத அளவில் 65 பரிந்துரைகள் வந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளைவிட 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிகம் என்று அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
நீடித்த நிலைத்தன்மைஇளையர்தலைவர்விருதுதிட்டம்