தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொழி சிறக்கப் பணியாற்றும் ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் விருதுகள்

5 mins read
தமிழ் முர­சு, சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­க­ம், தமிழ்­மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு இணைந்து வழங்கும் நல்லாசிரியர் விருதுகள் இவ்வாண்டு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிப் பிரிவுகளில் தலா இரு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. ஒருவருக்கு தேசிய கல்விக் கழக சிறந்தப் பயிற்சி ஆசிரியர் விருதும் மற்றொருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
1c4f8f90-b21d-4688-ae36-9bd9d046cf75
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற நல்லாசிரியர் விருது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணையமைச்சரும் தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவருமான தினே‌ஷ் வாசு தாஸ், விருதுபெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். - படம்: த கவி.

தாம் ரசித்த மொழியைப் பிறர் ரசிக்க விழையும் ஆசிரியர் சரத்குமார்

உயர்நிலைப்பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சரத்குமார் கணசேகரன்.
உயர்நிலைப்பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சரத்குமார் கணசேகரன். - படம்: த கவி

தமிழ்ப் பயன்பாட்டின் தற்போதை நிலைகுறித்த பதற்றமும் தாம் ரசித்துப் படித்த மொழியை அடுத்த தலைமுறையிடம் கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பும் தம்மை ஆசிரியராகத் தூண்டியதாகச் சொன்னார் இவ்வாண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்ற சரத்குமார் கணசேகரன், 31.

“கதைப் புத்தகங்களும் அவற்றில் எழுத்தப்பட்டுள்ள நுணுக்கமான உருவங்களும் என்னைத் தமிழ் மொழியின்பால் ஈர்த்தன. அவற்றை இப்போதைய தலைமுறையினர் பார்க்கும் விதம் எனக்கு வியப்பளிக்கிறது,” என்ற திரு சரத், சிறு சிறு அழகியல் கூறுகள்மூலம் மொழி மீதான ரசிப்பை மாணவர்களிடம் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான இவர், உயர்நிலைப் பள்ளிப் பிரிவில், 2025க்கான நல்லாசிரியர் விருதைப் பெற்றார்.

Watch on YouTube

“குறைந்தது ஐந்தாண்டு பணி அனுபவம் தேவை எனும் நிலையில், சரியாக ஐந்தாண்டுகள் கடந்தவுடன் எனக்கு இவ்விருது கிடைத்ததில் பெருமை. இதற்காகத் தொடர்ந்து உழைத்தேன். இது, மென்மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது,” என்றார் திரு சரத்.

வீடுகளில் தமிழில் பேசும் வழக்கம் குறைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்த இவர், பயன்முறைக் கற்றல் திட்டம், மெய்நிகர் தொழில்நுட்பம் இரண்டையும் திறம்பட உபயோகித்து தமிழ்மொழிப் பாடம் கற்பித்து வருவதாகவும் சொன்னார்.

தமிழாசிரியர் என்பதையும் தாண்டி கட்டொழுங்கு ஆசிரியராகவும் பங்களித்துவரும் இவர், “என் மாணவர்கள் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும் என்பதில் பெருமை,” என்றார்.

கடந்த ஆண்டு மின்னிலக்கக் கல்வியறிவுத் திறன்கள் குறித்த இணையவழி வகுப்புகளையும் வழிநடத்தினார் இவர்.

“விருது பெற்றவர்களிலேயே இளையவர் என்பது கனவுபோல் உள்ளது. அதனை நனவாக்க, என் திறன்களை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்றார் திரு சரத்.

மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உழைப்பவர்

உயர்நிலைப்பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளியின் மூத்த ஆசிரியர் இராமசாமி ஸ்டாலின்.
உயர்நிலைப்பள்ளிப் பிரிவுக்கான நல்லாசிரியர் விருதுபெற்ற புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளியின் மூத்த ஆசிரியர் இராமசாமி ஸ்டாலின். - படம்: த கவி

இயற்பியல் துறையில் பயின்று, கப்பல் தளவாடத் துறைகளில் பணியாற்றினாலும் தாம் விரும்பும் தமிழ்மொழியை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க ஒரே வழி என்பதால் ஆசிரியரானதாகச் சொன்னார் இராமசாமி ஸ்டாலின், 47.

உயர்நிலைப் பிரிவில் நல்லாசிரியர் விருதுபெற்ற மற்றோர் ஆசிரியரான இவர், புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளியின் மூத்த ஆசிரியராகவுள்ளார்.

ஒன்பதாண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட இவர், “மொழியை இக்காலத் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்ப்பதில் உள்ள சவாலை, அவர்களுக்கு என்னால் இயன்றவரை புதிய உத்திகள்மூலம் கற்பிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்,” என்றார் திரு ஸ்டாலின்.

இயல்பாகவே கதைகள், கவிதைகள், பட்டிமன்றம், இலக்கியம் ஆகிய துறைகளில் செயல்பட்டதால் எழுந்த ஆர்வம் ஓர் ஆசிரியராக தம்மை தகுதியாக்கிக்கொள்ளத் தூண்டியதாகவும் சொன்னார்.

தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பில் இணைந்த இவர், 2014ல் தங்கப் பதக்கத்துடன் நிறைவு செய்தார். தொடர்ந்து தேசிய கல்விக் கழகத்தில் இணைந்து பயின்ற இவர், அப்போதும் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது வென்றதைச் சுட்டினார்.

மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் மரபையும் நவீனத்தையும் கலந்து படைக்கும் வகையிலும், பொங்கல் உள்ளிட்ட கலாசாரப் பண்டிகைக் காலத்தில் மாணவர்களைக் காணொளிகள் படைக்கச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் திரு ஸ்டாலின்.

இவ்வகை நடவடிக்கைகள் அவர்களிடம் மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தைத் தருமென நம்புவதாகவும் இவர் சொன்னார். மேலும், கல்வி அமைச்சின் தொடக்கக் கல்லூரி கற்பித்தல் பயிற்சித் திட்டத்திலும் இவர் வழிகாட்டியாகப் பங்காற்றுகிறார்.

இவ்விருது கிடைத்ததில் தமக்கு இணையாகத் தம்மை ஆசிரியர் பணியில் சேர ஊக்குவித்த அனைவருக்கும் பங்குள்ளதாக திரு ஸ்டாலின் பகிர்ந்தார்.

மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் 

தொடக்கநிலைப் பிரிவில் நல்லாசிரியர் விருதுவென்ற வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியை நூர்மனிஷா சர்மணி.
தொடக்கநிலைப் பிரிவில் நல்லாசிரியர் விருதுவென்ற வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியை நூர்மனிஷா சர்மணி. - படம்: த கவி

வழக்கநிலைத் தேர்வில் சிறப்பாகச் செயல்படாத ஒரு பெண், பின் படித்து ஆசிரியராக மாறி, நல்லாசிரியர் விருதுபெற முடியுமென்றால் அனைவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதில் பெருமையென உவகையுடன் சொன்னார் இவ்வாண்டுக்கான நல்லாசிரியர் விருதைப் பெற்ற நூர்மனிஷா சர்மணி, 43.

தொடக்கநிலைப் பிரிவில் விருதுபெற்ற இவர், ஆசிரியர் பணியில் 22 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். 2004 முதல், வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளியில் இவர் பணியாற்றுகிறார்

“பள்ளியில் சிறந்து விளங்க முடியாமல் போனதால் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்தேன். அங்குப் பிறந்த உத்வேகம் என்னை ஆசிரியராவதற்கான பாதைக்கு இட்டுச்சென்றது,” என்று இவர் கூறினார்.

“மாணவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக அமைய வேண்டும் எனும் எண்ணத்தில் மீண்டும் சாதாரண நிலைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியிலும் ஈடுபட்டேன். இப்போதும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பட்டக்கல்வி பயில்கிறேன்,” என்றார் ஆசிரியை நூர்மனிஷா.

கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஆர்வமே போதுமானது என்பதை உணர்த்துவது தமது எண்ணம் என்ற இவர், செயற்கை நுண்ணறிவு குறித்து தெரிந்துகொள்வதிலும் அதைப் பிறரிடம் பகிர்வதிலும் பேரார்வம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

சிறு சிறு விளையாட்டுகள் மூலம் எழுத்துப் பயிற்சியளிப்பது, ‘டெட் டாக்’ (Ted Talk) பாணியில் தமிழில் பேசப் பயிற்றுவிப்பது எனப் பல நடவடிக்கைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார் இவர்.

“பல சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளேன் என்பது மனநிறைவாக உள்ளது. இவ்விருதை நன்றியுடன் ஏற்கிறேன். என் பணி மேலும் சிறக்கும் என நம்புகிறேன்,” என்று ஆசிரியை நூர்மனிஷா சொன்னார்.

மாணவர்கள் வழியிலேயே சென்று உதவுபவர்

தொடக்கநிலைப் பிரிவில் நல்லாசிரியர் விருதுவென்ற ஜெமின் தொடக்கப்பள்ளி ஆசிரியை அ.காயத்ரி.
தொடக்கநிலைப் பிரிவில் நல்லாசிரியர் விருதுவென்ற ஜெமின் தொடக்கப்பள்ளி ஆசிரியை அ.காயத்ரி. - படம்: த கவி

பல்வேறு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து, அவர்கள் வழியிலேயே சென்று அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஆசிரியை அ.காயத்ரி, 37.

ஜெமின் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் இவர், தொடக்கப்பள்ளிப் பிரிவில் நல்லாசிரியர் விருதை வென்றார்.

“எனக்கு ஆர்வம் இருந்ததால் தமிழ்மொழி எளிதாக இருந்தது. அதனால், என் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதே எனக்கு முதல் கடமை. வகுப்புகளை ஒரே பாணியில் நடத்தாமல், இருவழித் தொடர்புகளுடன் கூடுமானவரை அவர்களை ஈடுபடுத்துகிறேன்,” என்றார் அவர்.

2009ல் பணியைத் தொடங்கிய இவர், “மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் பகிர்வதற்கு இயல்பான தளம் அமைத்துக் கொடுத்துள்ளேன். சந்தேகம் ஏற்பட்டால் என்னை அணுகுவதற்கு தட்டச்சு செய்வதில் சிரமம் இருந்தாலும், குரல் பதிவாக அனுப்பக் கூறுகிறேன். அவர்களுக்கு விளங்கும்படி பதில்களைத் தருகிறேன்,” என்றார்.

மாணவர் கற்றல் தளத்தை அதிகம் உபயோகிப்பதாகக் கூறிய இவர், ‘காஹூட் உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகள், ‘கிளாஸ் பாயிண்ட்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பித்தல் அனுபவங்களை மேம்படுத்துவதாகவும் சொன்னார்.

தற்கால மாணவர்கள் பாராட்டையும் அங்கீகாரத்தையும் விரும்புகிறார்கள். அதனால் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதைக் கவனித்துள்ள ஆசிரியை காயத்ரி, சிறந்த போட்டி மனப்பான்மையை விதைப்பது, மதிப்பெண்கள், புள்ளிகள் அளித்து ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுவதாகக் கூறினார்.

தமக்கு விருது கிடைத்துள்ளது அங்கீகாரமும் மனமகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறிய இவர், பள்ளி, சக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என அனைவரது கூட்டு முயற்சியும் இதில் அடங்கியுள்ளது என்றும் சொன்னார்.

இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்: விருது அதற்கான உற்சாகம்

தேசிய கல்விக் கழக சிறந்தப் பயிற்சி ஆசிரியர் விருதுபெற்ற ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் இப்ராஹீம் அஷ்ரப் அலி.
தேசிய கல்விக் கழக சிறந்தப் பயிற்சி ஆசிரியர் விருதுபெற்ற ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் இப்ராஹீம் அஷ்ரப் அலி. - படம்: த. கவி

தம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஏற்படுத்திய தாக்கமே தம்மை ஆசிரியராக்கியதாகச் சொன்னார் இப்ராஹீம் அஷ்ரப் அலி, 55.

இவ்வாண்டுக்கான தேசிய கல்விக் கழக சிறந்த பயிற்சி ஆசிரியர் விருதை இவர் பெற்றார்.

கணிப்பொறித் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம்பெற்று பணியாற்றிவந்த இவர், தொடர்ந்து கல்வி பயில வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி படித்து தங்கப் பதக்கத்துடன் முடித்துள்ள இவர், முதுநிலைப் பட்டம் படித்து பின் ஆசிரியர் பயிற்சியும் மேற்கொண்டார்.

“கல்வித் துறை உட்பட அனைத்திலும் தொழில்நுட்பம் இன்றியமையாதது என்றாலும் ஆசிரியரின் இருப்பு ஏற்படுத்தும் தாக்கம் மேன்மையானது. சரியான முறையில் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் கவனமாக இருக்கிறேன்,” என்றார் திரு அ‌ஷ்ரப்.

எந்தச் செயலை மேற்கொண்டாலும் அதில் முழு உழைப்பைச் செலுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்ததால் தேசியக் கல்விக் கழகத்தில் சிறப்பாகச் செயலாற்றியதாகச் சொன்ன இவர், “இவ்விருது கிடைத்தது எதிர்பாராதது. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம். விருது அதற்கான உற்சாகம் தருகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்