வேலையிடப் பாதுகாப்பைக் கடைப்பிடித்தோருக்கு விருதுகள்

வேலையிடப் பாதுகாப்பைக் கடைப்பிடித்தோருக்கு விருதுகள்

3 mins read
e2231c04-c9e7-4e08-ae4c-087600962d6f
கடற்துறையில் வேலையிடப் பாதுகாப்பைக் கட்டிக்காத்ததற்காக ஞாயிற்றுகிழமை (ஜூன் 28) பத்து வெளிநாட்டு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தன் நிறுவனத்தில் நெருப்பு தொடர்பான பணிகளும் இயந்திரங்கள் சார்ந்த பணிகளும் பாதுகாப்பாக நடைபெறுவதில் திரு சுப்ரமணியன் காமாட்சி சுந்தரம், 46, முக்கியப் பங்காற்றி வருகிறார். 

“வேலையைத் தொடங்குமுன் அனைத்துப் பணிகளையும் பாதுகாப்பாகச் செய்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம்,” என்றார் ‘ஹன்வா ஆஃப்ஷார்’ பொறியியல் சேவைகள் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றிவந்துள்ள திரு காமாட்சி சுந்தரம்.

கடற்துறையில் வேலையிடப் பாதுகாப்பைக் கட்டிக்காத்ததற்காக ஞாயிற்றுகிழமையன்று (ஜூன் 28) அங்கீகரிக்கப்பட்ட பத்து வெளிநாட்டு ஊழியர்களில் அவரும் ஒருவர்.

அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர் நிலையம், அதன் வருடாந்தர தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) மே தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, ‘தலைசிறந்த தொழிலாளர்’ விருதுகளை வழங்கியது. 

சூன் லீ வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு நிலையத்தில் விருது விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான என்டியுசி துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான டெஸ்மண்ட் டான் விருதுகளை வழங்கினார்.

திரு காமாட்சி சுந்தரத்தின் நிறுவனத்திலிருந்து இன்னும் நான்கு நெடுங்கால ஊழியர்களுக்கு விருதுகள் கிடைத்தன.

திரு கோவிந்தராசு அய்யாசாமி,  37, அந்நிறுவனத்தில் தளவாடத் துறையில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார். அடிப்படை ஊழியராகச் சேர்ந்த அவர், பின்பு கவைதூக்கி (ஃபோர்க்லிஃப்ட்) இயக்குபவராக முன்னேறி, இன்று கனமான பொருள்களை ஏற்றி இறக்கும் பணிக்கான மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். 

நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவந்துள்ள திரு வேலாயுதம் மகேஷ், 41, மேற்பார்வையாளர், உதவி ஒருங்கிணைப்பாளர், போன்ற பலவித பொறுப்புகளில் இருந்துவந்து, இன்று பாரத்தை ஏற்றி இறக்கும் பணிகளை மேற்பார்வையிடுகிறார். “தேவையான உரிமங்களைப் பெற்றபின்பே பணிகளைத் தொடங்குவோம்,” என அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மின்னியல் வல்லுநர் பாலமுத்து தங்கவேலு, 37, இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதில் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி வருகிறார். “நாங்கள் பணியில் சேர்ந்ததும் எங்களுக்குத் தகுந்த வேலையிடப் பாதுகாப்புப் பயிற்சியை வழங்குகிறார்கள்,” என அவர் கூறினார். 

முதலுதவி, பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள் வகிக்கும் திரு கெய்ன் தாமஸ் ஆனா, 31, அந்நிறுவனத்திலிருந்து விருதுபெற்ற ஐந்தாவது ஊழியர்.

அண்மையில் நிறுவனம் திரு தங்கவேலு, திரு அய்யாசாமி, திரு மகேஷ் மூவரையும் பாரந்தூக்கி பயிற்சிக்கும் அனுப்பியது. 

வார்ட்சிலா சிங்கப்பூர், பேக்கர் ஹியூக்ஸ் நிறுவனங்களிலிருந்தும் ஊழியர்கள் விருதுகள் பெற்றனர்.

இவ்வாண்டு கப்பல்துறையை மையப்படுத்திய விருதுகளுக்கு கப்பல் கட்டுமான, கடல்சார் பொறியியல் தொழிற்சங்கமும் அதன் பங்காளிகளும் ஊழியர்களை நியமித்தது.

“வெளிநாட்டு ஊழியர் நிலையம் உங்களுக்குப் பக்கபலமாக நிற்கும். அண்மையில் சில நூறு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் சம்பளங்களைப் பெறாமல் வேலைக்கான உத்தரவாதம் இல்லாமல் சிரமப்பட்டபோது, வெளிநாட்டு ஊழியர் நிலையம் உடனடியாக குறுகியகால ஆதரவு வழங்கியது. தற்போது மனிதவள அமைச்சுடன் இணைந்து நிறுவனத்திடமிருந்து சம்பளங்களை மீட்கவும் பாதிக்கப்பட்ட ஒவ்வோர் ஊழியருக்கும் வேலை தேடித் தரவும் முயற்சி செய்து வருகிறோம்,” என்றார் திரு டான்.

“புதிதாக சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன, வேலையிடப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வுகாண்பது என்பதற்கு நான் வழிகாட்டுகிறேன்,” என்றார் எட்டு ஆண்டுகள் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதராக இருந்துள்ள திரு செல்லையா ராம்குமார், 45.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்னிலக்கக் கல்வி வழங்க ஒப்பந்தம்

கிட்டத்தட்ட 1,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்னிலக்கக் கல்வி, பயிற்சித் திட்டங்களைக் கொண்டுசேர்க்க வெளிநாட்டு ஊழியர் நிலையம், ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) உடன் ஈராண்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்வழி ஆகஸ்ட் முதல், மாதம் இருமுறை சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தில் மின்னிலக்கக் கல்விப் பயிலரங்குகள் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு, வளரும் தொழில்நுட்பங்கள் போன்றவைக் கற்பிக்கப்படும்.

சென்ற ஆண்டுமுதல் சங்கம் ஆறு பயிலரங்குகளை வெவ்வேறு பொழுதுபோக்கு நிலையங்களில் நடத்தியுள்ளது. அவற்றில் இரண்டு, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்துடன் நடத்தப்பட்டவை. 

“சேட்ஜிபிடி வைத்து கட்டுமானத் தளங்களிலுள்ள பிரச்சினைகளை ஆராயலாம். பலரும் கடன் வாங்கும்போது எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பதை முன்பே கணிக்காமல் மாட்டிக்கொள்கின்றனர். இவற்றை மின்னிலக்க உத்திகள்மூலம் தவிர்க்கலாம்,” என்றார் சங்கத்தின் தலைவர் துருவ் ஜெய்ன்.

மடிக்கணினிகள் இல்லாத ஊழியர்களுக்கு ஏற்றவாறு இதற்குமுன் கைப்பேசி சார்ந்த பயிலரங்குகளையும் நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் இயக்குநர் மைக்கேல் லிம், (இடமிருந்து முதல் வரிசை)  ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) தலைவர் துருவ் ஜெய்ன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். (பின்வரிசையில் இடமிருந்து) வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆலோசகர் இயோ குவாட் குவாங், என்டியுசி துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான டெஸ்மண்ட் டான், ஐஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பிரஷாந்த் பாண்டே, அதன் பொதுச் செயலாளர் அமித் குப்தா.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் இயக்குநர் மைக்கேல் லிம், (இடமிருந்து முதல் வரிசை) ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்) தலைவர் துருவ் ஜெய்ன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். (பின்வரிசையில் இடமிருந்து) வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆலோசகர் இயோ குவாட் குவாங், என்டியுசி துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான டெஸ்மண்ட் டான், ஐஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் பிரஷாந்த் பாண்டே, அதன் பொதுச் செயலாளர் அமித் குப்தா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
‘தலைசிறந்த தொழிலாளர்’ விருதுகளை வென்ற (இடமிருந்து) பாலமுத்து தங்கவேலு, சுப்ரமணியன் காமாட்சி சுந்தரம், வேலாயுதம் மகேஷ், கோவிந்தராசு அய்யாசாமி.
‘தலைசிறந்த தொழிலாளர்’ விருதுகளை வென்ற (இடமிருந்து) பாலமுத்து தங்கவேலு, சுப்ரமணியன் காமாட்சி சுந்தரம், வேலாயுதம் மகேஷ், கோவிந்தராசு அய்யாசாமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்