தீ விபத்து குறித்த விழிப்புணர்வை மூத்தோரிடையே அதிகரிக்கவேண்டும்: டெனிஸ் புவா

தீ விபத்து குறித்த விழிப்புணர்வை மூத்தோரிடையே அதிகரிக்கவேண்டும்: டெனிஸ் புவா

2 mins read
2ebd88e5-d90d-4e4d-bd75-7372109a08ff
ரேஸ் கோர்ஸில் உள்ள புளோக் 684ல் மூண்ட தீயில் 88 வயது ஆடவர் உயிரிழந்தார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் தீ விபத்தால் கடந்த ஆண்டு ஆறு பேர் மாண்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அந்தப் புள்ளிவிவரங்களின்படி தீ விபத்தில் 2025ஆம் ஆண்டில் 94 பேர் காயமுற்றனர். ஒப்புநோக்க, 2024ஆம் ஆண்டில் கழக வீடுகளில் மூண்ட தீயில் 7 பேர் மாண்டதுடன் 80 பேர் காயமடைந்தனர்.

2024ஆம் ஆண்டு தீ விபத்தால் மாண்டோரில் குறைந்தது மூவர் மூத்தோர். அவர்களில் ஒருவர் மார்சிலிங் கழக வீட்டில் இருந்த 72 வயது ஆடவர். மற்றொருவர் சுவா சூ காங் கழக வீட்டில் இருந்த 79 வயதுப் பெண்.

தீ விபத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பது குறித்து குடியிருப்பாளர்கள், குறிப்பாக மூத்தோர் அறிந்துள்ளனரா என்பதைக் கண்டறிய தோ பாயோ லோரொங் 1, சர்க்கிட் சாலை, புக்கிட் மேரா ஆகிய வட்டாரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேரடியாகச் சென்றது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அப்போது பேசிய கிட்டத்தட்ட 15 பேரில் ஒருவர்கூட தீயணைப்பானை வைத்திருக்கவில்லை அல்லது தீயணைப்பானைப் பயன்படுத்த அறிந்திருக்கவில்லை.

இவ்வாண்டு ஜூலை 28ஆம் தேதியிலிருந்து தீ விபத்தில் மூத்தோர் மூவர் மாண்டனர்.

ஆக அண்மையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புளோக் 684ல் மூண்ட தீயால் 55 வயதுக்கும் 88 வயதுக்கும் இடைப்பட்ட ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி 88 வயது ஆடவர் உயிரிழந்தார்.

2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க தீ விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று விழுக்காடு அதிகரித்தது. 2024ஆம் ஆண்டு 1,990 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 2,050க்கு அதிகரித்தது.

ஜாலான் புசார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டெனிஸ் புவா, அண்மைய தீ விபத்துகள் குறித்து கவலை தெரிவித்தார்.

“மூத்தோர் அதிகம் வசிக்கும் வட்டாரங்களில் தீ விபத்தைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்,” என்றார் புவா.

இந்நிலையில், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, துடிப்புடன் மூப்படையும் நிலையம் ஆகியவற்றின் அடித்தளத் தொண்டூழியர்கள் சிலர் கம்போங் கிளாம் வட்டாரத்தில் அடிக்கடி தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரைகளை ஆற்றிவருவதாகப் புவா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்