ஆயர் ராஜா விரைவுச்சாலை விபத்தில் 11 பேர் காயம்

ஆயர் ராஜா விரைவுச்சாலை விபத்தில் 11 பேர் காயம்

காலையில் உச்சநேரப் போக்குவரத்துப் பரபரப்பில் விபத்து நிகழ்ந்தது
படம்: CAUSEWAY RIDER THE UNKNOWN COMMUNITY/ஃபேஸ்புக்

20 May 2026 - 2:54 pm

1 mins read

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (ஏஒய்இ) செவ்வாய்க்கிழமை (மே 19) காலை ஒரு காருக்கும் ஒன்பது மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையே நடந்த விபத்தில் 11பேர் காயமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏஒய்இ சாலையில் மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை (எம்சிஇ) நோக்கிச் சென்ற பாதையில் காலை 6.30 மணிக்கு நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) கூட்டாகத் தெரிவித்தன.

இருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் (என்யுஎச்) மீதம் இருந்த ஒன்பது பேர் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்கும் சென்றனர். அச்சமயம் காயமடைந்த அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

அந்த 11 பேரில் மோட்டார்சைக்கிள் ஓட்டிய ஒன்பது ஆடவர்கள் 26 முதல் 61 வயதுக்குட்பட்டவர்கள். மற்ற இருவரில் 21 வயது ஆடவரும், மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த 32 வயது மாதும் அடங்குவர்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்கள்

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில், 2025ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களில் எண்ணிக்கை 7 விழுக்காடு உயர்ந்து 7,560 ஆனது. அந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 7,053 என இருந்தது.

விபத்துகளில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை 2024ல் 3,973 ஆக இருந்து 2025ல் 4,227 என உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆயர் ராஜா விரைவுச்சாலைவிபத்துசாலை விபத்துகாயம்மோட்டார்சைக்கிள்வாகனம்