ஆயுர்வேத மூலிகை மருந்து, போலி புரோபயோடிக் மருந்து குறித்து எச்சரிக்கை

1 mins read
d8f21533-f619-43ab-b70f-55624419a67f
ஆயுகல்ப் மகாயோக்ராஜ் குக்குலு எனும் ஆயுர்வேத மருந்தையும் (இடது) போலி லெக்டோஜிஜி புரோபயோடிக் மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படங்கள்: சுகாதார அறிவியல் ஆணையம்

ஆயுகல்ப் மகாயோக்ராஜ் குக்குலு எனும் ஆயுர்வேத மருந்து பொட்டலங்களைச் சுகாதார அறிவியல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

அந்த மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈய நச்சு காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டதாக அறியப்படுகிறது.

30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட அப்பெண் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவருக்குச் சோர்வாக இருந்ததாகவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முதுகு வலி காரணமாக ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்பு யூனியன் யோகா ஆயுர்வேதாவிடமிருந்து அந்த மருந்தை அவர் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட ஈயத்தின் அளவைவிட அந்த மருந்தில் ஈயத்தின் அளவு 6,000க்கும் அதிகம் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, போலி லெக்டோஜிஜி புரோபயோடிக் மருந்து தொடர்பான விளம்பரத்தை உடனடியாக நீக்கும்படி மின் வர்த்தகத் தளம் ஒன்றுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மருந்தை உட்கொண்டு மூவர் கொண்ட குடும்பம் நோய்வாய்ப்பட்டதாக திங்கள்கிழமை அன்று (டிசம்பர் 23) ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்