முகக்கவசம் அணிய மறுத்த மாதிற்கு அபராதம் செலுத்த கூடுதல் அவகாசம்

முகக்கவசம் அணிய மறுத்த மாதிற்கு அபராதம் செலுத்த கூடுதல் அவகாசம்

2 mins read
ce093cd4-2c0d-43d4-bd7d-8deb0e392a41
பூன் சியூ யோக், 56, கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது முகக்கவசம் அணிய மறுத்ததற்காக தற்போது சிறையில் உள்ளார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முகக்கவசம் அணிய மறுத்த மாது ஒருவர், எஞ்சிய அபராதத்தைச் செலுத்தாததற்காக நீதிபதியிடம் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவர் கூடுதல் காலம் சிறையில் இருக்கவேண்டியதில்லை.

பூன் சியூ யோக், 56, என்ற அம்மாது கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது முகக்கவசம் அணிய மறுத்ததற்காக தற்போது சிறையில் உள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி அவருக்கு 9 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையின் ஒரு பகுதியாக அவர் $3,000 அபராதம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தாவிட்டால், அவர் மேலும் 10 நாள்கள் சிறையில் இருக்கவேண்டும்.

இருப்பினும், செப்டம்பர் 18ஆம் தேதி தனது சிறைத்தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அபராதத்தை இரண்டு கட்டங்களாகச் செலுத்துவதற்குத் தாம் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்ற அலுவலர் ஏற்றுக்கொண்டதாக பூன் தெரிவித்தார்.

அதனைத் தொடந்து, அவர் செப்டம்பர் 18ஆம் தேதி $1,500 செலுத்தினார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் மீதமுள்ள தொகையைச் செலுத்தவேண்டும் என்று தாம் எதிர்பார்த்ததாக அவர் சொன்னார்.

இருப்பினும், எஞ்சிய அபராதத்தைச் செலுத்தாததன் தொடர்பில் அவர் அக்டோபர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அப்போது, நீதிபதி டான் ஜென் செயிடம் பூன் விளக்கம் அளித்தார். இருப்பினும், எஞ்சிய தொகையைச் செலுத்துவதன் தொடர்பில் நீதிபதியே முடிவெடுப்பார் என்று நீதிமன்ற அலுவலர் பூனிடம் கூறியதாக நீதிபதி டான் கூறினார்.

ஆனாலும், நவம்பர் 15ஆம் தேதிக்குள் எஞ்சிய அபராதத்தைச் செலுத்தமுடியுமா என்று நீதிபதி கேட்டதற்கு, தம்மால் முடியும் என்று பூன் கூறினார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்