பிரான்சில் தொலைத்த பணப் பையைத் திரும்ப பெற்ற வியப்புக்குரிய தருணம் குறித்துக் கலாசார, சமூக, இளையர் துறை, போக்குவரத்து துணையமைச்சர் பே யாம் கேங் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
குடும்பத்துடன் விடுமுறைக்காக பிரான்ஸ் சென்ற திரு பே, அங்குள்ள ஓர் உணவகத்திற்குச் சென்றபோது கார் நிறுத்துமிடம் ஒன்றில் பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
“உணவுக்காகக் காத்திருக்கும்போது பெண் ஒருவர் உணவகத்திற்குள் வந்து நான் சிங்கப்பூரைச் சேர்ந்தவரா என்றும் அமைச்சில் வேலை செய்கிறேனா என்றும் கேட்டார். அவர் பார்ப்பதற்குச் சிங்கப்பூரர்போல இல்லை. ஒருவேளை சிங்கப்பூரில் இதற்குமுன் தங்கியிருந்ததால் என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என நினைத்துக்கொண்டேன்,” என்று திரு பே குறிப்பிட்டார்.
கேப்பிரியெல்லா என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்தப் பெண் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தங்கியிருந்ததாகக் கூறியதாகவும் திரு பே சொன்னார்.
“என் பணப்பையைக் கண்டெடுத்து அதில் என் அடையாள அட்டையைக் கண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெண் அதை ஒப்படைத்தார். முன்னதாக, பணப்பையின் உரிமையாளரை கார் நிறுத்துமிடத்தில் அவர் தேடிப் பார்த்ததாகச் சொன்னார்,” என்றார் திரு பே.
அன்றைய நாள் தமது அதிர்ஷ்ட நாள் என்று கூறிய திரு பே, அந்தப் பெண்ணுக்கு நன்றி சொன்னதுடன் காவல் நிலையத்துக்கு அந்தப் பெண்ணுடன் சென்றதாகக் குறிப்பிட்டார்.
அங்கிருந்த காவல்துறை அதிகாரியும் சிங்கப்பூர்த் தொலைபேசி எண்ணிலும் ‘ஃபேஸ்புக் மெசென்ஜர்’ மூலமும் தம்மைத் தொடர்புகொள்ள முயன்றதாக அவர் சொன்னார்.

