அமெரிக்காவால் தேடப்படும் 34 வயதுச் சிங்கப்பூரரான கே ஸியின் பிணை மனுவைச் செவ்வாய்க்கிழமை (மே 26) உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உலகளாவிய வர்த்தக முறைகேடு ஈடுபட்டதாகவும் பண மோசடிக் கும்பலை வழிநடத்தியதாகவும் அவர்மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
2024 ஜூலை மாதத்தில், சிங்கப்பூர்க் காவல் துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கே ஸி கைது செய்யப்பட்டார்.
தமது இருமுனை மனச் சீர்குலைவு நோய், இடது கண் பார்வையின்மைக் குறைபாடு ஆகிய உடல்நலப் பிரச்சினைகளைக் காரணமாகத் தெரிவித்து, அவர் பிணை மனுவைத் தாக்கல் செய்தார்.
தனக்குச் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் மோசமாக இருப்பதாகவும் அதில் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது குடும்பம் சிங்கப்பூரில் வசிப்பதால் தாம் நாட்டை விட்டுத் தப்பியோட வாய்ப்பில்லை என்றும் அவர் வாதிட்டார்.
இருப்பினும், நீதிபதி அவரது மனுவை நிராகரித்தார்.
கே ஸியின் இடது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிரந்தரமானது என்றும் பிணையில் சென்று சிகிச்சை மேற்கொண்டாலும் அது குணமடைவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவரது மனநல நிலையைச் சிறைச்சாலை அமைப்பால் பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும் என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டது. அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் வேறொரு தேதியில் நடைபெறும்.

