குறிக்கோளையும் நடைமுறைவாதத்தையும் சமன் செய்யும் 2035 வேளாண் இலக்குகள்: ஸாக்கி

2 mins read
462790d8-4dca-4545-9025-b6d097efd5c5
2025 நவம்பர் 5ஆம் தேதி சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட உட்புற செங்குத்துப் பண்ணை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பண்ணைகளுக்கான திருத்தப்பட்ட 2035ஆம் ஆண்டு இலக்குகள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய உணவு வகைகளைக் கருத்தில் கொண்டும் அதிக உற்பத்திச் செலவு மற்றும் உணவு உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் கவனத்தில் கொண்டும் குறிக்கோளையும் நடைமுறைவாதத்தையும் சமநிலையில் கையாள்வதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அவர் ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

2030க்குள் நாட்டின் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தனது அசல் இலக்கைக் கைவிடும் அரசாங்கத்தின் அண்மைய முடிவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு திரு ஸாக்கி பதிலளித்தார்.

புதிய இலக்குகளை அடைய முடியுமா அல்லது அவை வெறும் விருப்பங்களாகவே இருக்குமா என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பண்ணைகள் மூடப்பட்டது, உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி என உள்நாட்டு வேளாண் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், ஓராண்டுகால மறுஆய்வுக்குப் பிறகு அரசாங்கம் கடந்த நவம்பரில் ‘30க்குள் 30’ என்ற இலக்கைக் கைவிட்டது.

அதற்குப் பதிலாக, 2035க்கான திருத்தப்பட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இதன்படி, சிங்கப்பூரில் உட்கொள்ளப்படும் இலை, கனிவகை காய்கறிகள், முளைகட்டிய பயறுகள், காளான்கள் உள்ளிட்ட நார்ச்சத்துள்ள உணவு வகைகளில் 20 விழுக்காட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது இலக்குகளில் ஒன்று. 2024ல், சிங்கப்பூரில் உட்கொள்ளப்பட்ட நார்ச்சத்துள்ள உணவு வகைகளில் ஏறக்குறைய 8 விழுக்காடு மட்டுமே இங்கு பயிரிடப்பட்டவை.

மற்றோர் இலக்கு, முட்டை மற்றும் கடலுணவு உட்பட புரதச்சத்து உணவு உற்பத்தி தொடர்பானது. இது, உள்நாட்டு உற்பத்தி மூலம் மொத்த உள்நாட்டுப் பயனீட்டில் 2035க்குள் 30 விழுக்காடு அளவைப் பூர்த்தி செய்வதாகும். 2024ல் இது 26 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய நான்கு முனை உத்தியின் ஒரு பகுதியாக இந்த 2035 இலக்குகள் உள்ளன.

இறக்குமதிகளைப் பல்வகைப்படுத்துதல், உணவுப் பொருள்களைக் கையிருப்பில் வைத்தல், உணவு வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கும் உணவுப் பொருள்கள் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டா என்ற உத்தரவாதத்தைப் பெறுவதற்கும் பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளுதல் ஆகியவை மற்ற மூன்று அம்சங்களாகும்.

“இந்த நான்கு முனை உத்தி, ஒட்டுமொத்த உணவு மீள்திறனைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, உணவு விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் காலத்தில் நம்மிடம் போதுமான உணவு இருப்பதை இது உறுதிசெய்யும்,” என்று திரு ஸாக்கி எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்