கோலாலம்பூர்: மலேசியாவின் புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஆறடிப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு, அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த அவ்விபத்தில் 62 வயது சிங்கப்பூர்ப் பெண் ஒருவர் மாண்டுபோனார்.
நின்றுபோன இயந்திரத்தை மீண்டும் இயக்கியபோது, வேன் ஓட்டுநரால் சரியான நேரத்தில் வேகத்தடையை அழுத்த இயலவில்லை என்று தென்மேற்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் கமாருல் ரிசால் ஜெனால் கூறியதாக ‘தி ஸ்டார்’ செய்தி தெரிவித்தது.
அவ்விபத்தில் எட்டு ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் 11 பேர் பாதிக்கப்பட்டதாக திரு ரிசால் குறிப்பிட்டார். அவர்களில் பத்துப் பேர் சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள். மற்றொருவர் உள்ளூர்வாசியான வேன் ஓட்டுநர்.
இதனிடையே, காயமடைந்த சிங்கப்பூரர்கள் எழுவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்றும் அவர்கள் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் திரும்ப உள்ளனர் என்றும் பினாங்கு சுற்றுலா, புத்தாக்கப் பொருளியல் தலைவர் வோங் ஹோன் வெய் கூறினார்.
வேன் ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் மூவருக்கு இன்னும் சிகிச்சை தொடர்வதாகவும் அவர் சொன்னார்.
இருவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது என்றும் ஆயினும், மற்ற எவரின் உயிருக்கும் பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

