கேலாங் பகுதியில் உள்ள ‘காசா ஏரட்டா’ கூட்டுரிமைக் குடியிருப்பில், குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கு அதன் நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்பின் நிர்வாகக் குழுவுக்கும் சில வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.
மொத்தம் 78 வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் நிர்வாகக் குழு தங்களுக்குச் சட்டரீதியான எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியதாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
குடியிருப்பின் நிர்வாகக் குழு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதப் பொதுக்கூட்டத்தில் ஒரு புதிய துணை விதியை நிறைவேற்றியது. அதன்படி, கட்டுமானத் துறையைச் சேர்ந்த வேலை அனுமதி அட்டை ஊழியர்கள் அங்குத் தங்க தடை விதிக்கப்பட்டதுடன், எந்தவொரு நபரையும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு அங்குத் தங்க வைக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு துணை விதியில், ‘எம்பிளாய்மென்ட் பாஸ்’, ‘எஸ் பாஸ்’ மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த மலேசிய ஊழியர்கள் மட்டுமே அங்குத் தங்க தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை மீறித் தங்கள் வீடுகளை நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த 12 உரிமையாளர்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் நிர்வாகக் குழு சட்டரீதியான எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியது. வாடகை ஒப்பந்தங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு $200 நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த விதியை நிறைவேற்றிய முதல் பொதுக்கூட்டத்தில் வெறும் 12 வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே கலந்துகொண்டதால், இந்தத் துணை விதிகளின் செல்லுபடித்தன்மை குறித்து சில உரிமையாளர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களில் 75 விழுக்காட்டினர் ஆதரவளித்தால் இத்தகைய துணை விதிகள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் இதில் அதிருப்தி உள்ள உரிமையாளர்கள் அடுக்குமாடிச் சொத்து தீர்ப்பாயத்தை நாடலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சட்டரீதியான எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்ட 12 வீட்டு உரிமையாளர்களில் இருவர் தங்கள் குத்தகைதாரர்களை வெளியேற்ற இணங்கியுள்ளதாக நிர்வாகக் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

