‘ரோசாபெல்லா’ நிறுவனத்தின் முருங்கைப் பொடி அடங்கிய மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சுகாதார அறிவியல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்தத் தயாரிப்புகளில் சால்மோனெல்லா (Salmonella) கிருமி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாகத் தொற்றுநோய் தடுப்பு நிலையமும் சுகாதார அறிவியல் ஆணையமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தத் தயாரிப்பின் குறிப்பிட்ட சிலவற்றை அமெரிக்கா திரும்பப் பெற்றது குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.
மேலும், அதனுடன் தொடர்புடைய ‘சால்மோனெல்லா’ கிருமித் திரிபு, மருந்துகளுக்குக் கட்டுப்படாத வீரியம் கொண்டது என அந்த அறிக்கையில் அவை குறிப்பிட்டன.
அமெரிக்காவில் அந்தத் தயாரிப்புகளுடன் தொடர்புடைய ஏழு அவ்வகை கிருமி பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அதில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவை கூறின.
சிங்கப்பூரின் சில இணையவழி விற்பனைத் தளங்களில் ‘ரோசாபெல்லா’ நிறுவனத்தின் முருங்கைப் பொடி அடங்கிய மாத்திரைகள் விற்கப்பட்டன. சால்மோனெல்லா கிருமி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள குறிப்பிட்ட அந்தத் தயாரிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக நீக்குமாறு அத்தளங்களின் நிர்வாகிகளுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் அவற்றிலிருந்து நீக்கப்பட்டன.

