சொந்த ஊரில் மாளிகை கட்டி சிங்கப்பூர் முதலாளியை அழைத்த பங்ளாதே‌ஷ் ஊழியர்

சொந்த ஊரில் மாளிகை கட்டி சிங்கப்பூர் முதலாளியை அழைத்த பங்ளாதே‌ஷ் ஊழியர்

படம்: சமூக ஊடகம்/ ஃபேஸ்புக்

18 Nov 2026 - 5:53 pm

2 mins read

சிங்கப்பூரில் பணிபுரிந்த பங்ளாதேஷ் ஊழியர், தமது சொந்த கிராமத்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியதுடன், தமது சிங்கப்பூர் முதலாளியையும் அங்கு அழைத்துள்ளார்.

ஏறத்தாழ 25 மில்லியன் டாக்கா (ஏறத்தாழ S$258,000) செலவில் அந்த பிரம்மாண்டமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டைப் பார்வையிடுவதற்காகத் தமது முதலாளியையும் அவர் அழைத்தார்.

திங்கட்கிழமையன்று (நவம்பர் 16) சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில், அந்த ஊழியர், அவரது சிங்கப்பூர் முதலாளியுடன் உரையாடிக்கொண்டே வீட்டைச் சுற்றிக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. பங்ளாதேஷின் குமில்லா (Cumilla) நகரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் முதலாளிகளைச் சொந்த ஊருக்கு அழைத்து வருவது வழக்கம் என அந்த காணொளியைத் தொகுத்து வழங்கியவர் குறிப்பிட்டார்.

திறந்தவெளி வயல்களுக்கும் பசுமைக்கும் நடுவே மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வீடு அமைந்துள்ளது. வீட்டின் நுழைவாயிலில் சிங்கப்பூர், பங்ளாதேஷ் ஆகிய இரு நாடுகளின் கொடிகளும் இடம்பெற்றுள்ளன.

சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட நடைபாதை வீட்டின் முன் கதவுக்கு அழைத்துச் செல்கிறது. வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம் தாராளமாக வரும் வகையில் திரைச்சீலைகளுடன் கூடிய பெரிய கண்ணாடி ஜன்னல்களும், மாடிகளை இணைக்கும் சுழல் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பாணியில் வடிவமைக்கப்பட்ட வீடு

வீட்டிற்கு வெளியே பேசிய சிங்கப்பூர் முதலாளி, சுற்றுப்புறம் அழகாக இருப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் இங்கு ஒரு தங்குவிடுதியை கூடத் தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். பங்களாதேஷிற்கு முதன்முறையாக வந்த அவர், தனது ஊழியரின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் சிங்கப்பூரில் வசித்தோம். அங்கிருக்கும் வீடுகளைப் பார்த்த பிறகுதான் எனக்கு இந்த எண்ணம் வந்தது. நம் ஊரிலும் இதேபோல் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,” என வீட்டு உரிமையாளர் கூறினார்.

இவ்வளவு பணத்தைக் கிராமத்தில் செலவிடுவதற்குப் பதிலாக நகரத்தில் முதலீடு செய்திருக்கலாமே எனும் கேள்விக்கு பதிலளித்த அந்த உரிமையாளர், “எனது சொந்த கிராமத்தில் இப்படியொரு வீடு கட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு,” என்றார்.

வீட்டில் அதிகளவில் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு சிங்கப்பூர் கட்டடக்கலையே முக்கிய உத்வேகம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த காணொளி 4.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 168,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் அந்தத் ஊழியரின் உழைப்பைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்