பங்ளாதேஷ் அரசியலில் வலுவடையும் வலசாரிகள்: ஆய்வாளர்கள்

பங்ளாதேஷ் அரசியலில் வலுவடையும் வலசாரிகள்: ஆய்வாளர்கள்

4 mins read
1dc8ba07-01d6-43d2-aba3-2535f88cda4a
வலசாரிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பெண்ணிய ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி

தெற்காசியாவில் ஸி தலைமுறையினர் (Gen Z) முன்னெடுக்கும் மாபெரும் அரசியல் எழுச்சிகளையும் ஆட்சி மாற்றங்களையும் ஆராயும் தெற்காசிய ஆய்வுக் கழக அனைத்துலக மாநாடு இவ்வாண்டு மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இம்மாநாட்டில், பங்ளாதேஷில் நிகழ்ந்த அண்மைய மக்கள் எழுச்சி குறித்தும், அதன் சமூக, அரசியல் தாக்கங்கள் குறித்தும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்கள் இருவர் தங்களது ஆழமான பார்வைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜென் ஸி இளையர்களின் புதிய அரசியல் மொழி

அமெரிக்காவின் கோல்கேட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் நவீன் முர்ஷித் இணைய நேரலையில் திங்கட்கிழமை (மார்ச் 24) அளித்த தமது உரையில், பங்ளாதேஷில் மாணவர்களும் இளையர்களும் முன்னெடுத்த போராட்டங்களின் தன்மையை விரிவாக விளக்கினார்.

“இசட் தலைமுறையினர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருப்பவர்கள் என்றும், அவர்களைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அக்கறையற்றவர்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால், அது முற்றிலும் தவறானது என்பதை இந்த எழுச்சி நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இளையர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த மீம்ஸ் (memes), சுவரோவியங்கள், ராப் முழக்கங்கள் போன்ற புதிய தகவல் தொடர்பு வடிவங்களைப் பயன்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். இவை வெறும் இணையவழிப் பகிர்வுகளாக மட்டும் நிற்காமல், வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டைக் கட்டமைக்கப் பெரிதும் உதவின.

“போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் அரசாங்கம் இணையத்தள சேவையைத் துண்டித்த ஒரு வார காலத்தில், இந்தச் சுவரோவியங்களே இளையர்களின் தகவல் தொடர்புச் சாதனமாக மாறின. தெருக்களில் உள்ள சுவர்கள், சமூக வலைத்தளங்களின் இடத்தை நிரப்பின,” என்று அவர் விளக்கினார்.

லட்சக்கணக்கான மக்கள் எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கிப் போராடியதை இணைப் பேராசிரியர் முர்ஷித் குறிப்பிட்டார்.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பியோடிய மறுநாள், காவல்துறையோ அல்லது வேறு எந்த அரசு நிர்வாகக் கட்டமைப்போ இயங்காத நிலையில், மாணவர்கள் தாமாக முன்வந்து போக்குவரத்தைச் சீர்செய்ததையும், பொது இடங்களைத் தூய்மைப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தலைதூக்கும் வலசாரி எண்ணப்போக்குகள் 

அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் (Amherst) கல்லூரியின் மானுடவியல், சமூகவியல் பேராசிரியர் நுஸ்ரத் சௌத்ரி தனது உரையில், ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பங்ளாதேஷில் உருவாகியுள்ள புதிய வலசாரி அரசியல் போக்குகள் குறித்துப் பேசினார்.

“ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் ‘தௌஹீதி ஜனதா’ (Tawhidi Janata) என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன,” என்று அவர் தெரிவித்தார். ‘தௌஹீத்’ என்ற அரபுச் சொல்லையும் (இறைவன் ஒருவனே என்ற இஸ்லாமியக் கோட்பாடு), ‘ஜனதா’ என்ற தெற்காசியச் சொல்லையும் (மக்கள்) இணைத்து இந்தப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெயரின் கீழ் ஒன்றுதிரளும் கும்பல்கள், சமய அடிப்படையில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகப் பேராசிரியர் நுஸ்ரத் கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டிய அவர், ரங்பூர் (Rangpur) பகுதியில் இஸ்லாமிய சமயப்பள்ளியான மதரஸாவின் அச்சுறுத்தலால் பெண்களுக்கான காற்பந்துப் போட்டி ரத்து செய்யப்பட்டதையும் டாக்கா பல்கலைக்கழகத்தில் (Dhaka University) தலையை மூடாமல் வந்ததற்காக ஒரு மாணவியை அவமதித்த நபர் கைது செய்யப்பட்டபோது, ஒரு கும்பல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரை விடுவித்ததையும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுக்கள் சூஃபி (Sufi) வழிபாட்டுத் தலங்களைத் தாக்கியதையும் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி செய்தித்தாள் அலுவலகங்களுக்கு வெளியே பசுக்களை வதைத்துப் போராட்டம் நடத்தியதையும் பேராசிரியர் நுஸ்ரத் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி, பங்ளாதேஷின் முதல் பிரதமரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Sheikh Mujibur Rahman) வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமும் அருங்காட்சியகமும் தீக்கிரையாக்கப்பட்டன.

“ஆகஸ்ட் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இத்தகைய கும்பல் வன்முறைகளால் 119 பேர் உயிரிழந்துள்ளனர்; 74 பேர் காயமடைந்துள்ளனர். 2024ஆம் ஆண்டில் மட்டும் 179 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச உயிரிழப்பாகும்,” எனப் பேராசிரியர் நுஸ்ரத் வேதனை தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு இந்தியா நீண்டகாலமாக அளித்து வந்த ஆதரவின் காரணமாக, பங்ளாதேஷ் மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான மனநிலை ஆழமாக வேரூன்றியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசியல் வெற்றிடத்தில் சமய அடிப்படைவாதக் குழுக்கள் தங்களை ‘மக்கள் நீதியின்’ காவலர்களாக நிலைநிறுத்திக்கொள்ள முயல்வதாகவும் பேராசிரியர் நுஸ்ரத் எச்சரித்தார்.

“ஒரு நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் புரிந்துகொள்ள, வெறுமனே தேர்தல்களை மட்டும் நம்பியிருக்காமல், பொதுமக்களிடையே உருவாகும் இதுபோன்ற ‘கும்பல்’ (Mob) மற்றும் ‘தௌஹீதி ஜனதா’ போன்ற புதிய அரசியல் முகங்களையும் நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும்,” என்று கூறி பேராசிரியர் நுஸ்ரத் தனது உரையை நிறைவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்