அமைச்சர் சண்முகம்: பங்ளாதேஷ் சமயப் போதகர் வேறொரு பெயரைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்தார்

2 mins read
6decb243-9fcc-4f9d-81d4-94b8f93c14dd
அமீர் ஹம்சாவின் சிங்கப்பூர் பயணம் குறித்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று அமைச்சர் சண்முகம் பதிலளித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தினத்தன்று துவாஸ் வட்டாரத்தில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் சமயப் பாகுபாட்டைத் தூண்டிவிடும் வகையில் பேசிய பங்ளாதேஷ் சமய போதகர் அதற்கு முன்பே உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் ஆனால் அவர் வேறொரு பெயரைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்குள் நுழைந்ததாகவும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் செப்டம்பர் 9ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்குள் நுழைய அமீர் ஹம்சா பயன்படுத்திய கடப்பிதழிலும் விசாவிலும் வேறொரு பெயர் இருந்ததாக அவர் கூறினார்.

அதுவே சிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் என்பதால் அவரது உடல்சார் தரவுகள் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் தரவுத்தளத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பட்டியலில் அமீர் ஹம்சா ஏற்கெனவே இருந்ததால் அவரது உடல் அங்கத் தரவு மட்டும் இருந்திருந்தால் சிங்கப்பூருக்குள் நுழைவது அவர்தான் என்று தெரிந்திருக்கும் என்றார் அமைச்சர் சண்முகம்.

அவ்வாறு தெரியவந்திருந்தால் அவர் கடும் சோதனைக்கு ஆளாகியிருப்பார் என்று அவர் தெரிவித்தார்.

அமீர் ஹம்சாவின் சிங்கப்பூர் பயணம் குறித்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று அமைச்சர் சண்முகம் பதிலளித்தார்.

துவாஸ் வட்டாரத்தில் உள்ள டெக் பார்க் கிரசெண்ட்டில் இருக்கும் லன்டானா லாட்ஜ் தங்குவிடுதியில் அமீர் ஹம்சா ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று உரையாற்றினார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அமீர் ஹம்சா தமது உரையின்போது தெரிவித்தார்.

வலுவான சமயக் கொள்கைகள் கொண்டவர்கள் எனத் தீவிரவாதிகளை அவர் முன்னுதாரணங்களாகக் காட்டினார்.

பங்ளாதேஷியர் என்ற முறையில் சிங்கப்பூருக்கு வர அமீர் ஹம்சாவுக்கு விசா தேவை என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

சிங்கப்பூருக்குள் வருபவரின் விசாவில் உள்ள படத்தையும் கடப்பிதழிலும் உள்ள படத்தையும் பயன்படுத்தி உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புப் பட்டியலில் அந்த நபர் இருக்கிறாரா என்று சரிபார்க்கப்படும்.

ஆனால் சில சமயங்களில் கண்காணிப்புப் பட்டியலில் படங்கள் இருக்காது என்றும் வெறும் பெயர் மட்டுமே இருக்கும் என்றும் திரு சண்முகம் தெரிவித்தார்.

அல்லது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள படம் தெளிவாக இல்லாமல் இருக்கக்கூடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்