ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் தரை திடீரென சரிந்ததில் 31 வயது பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் சனிக்கிழமை (ஜனவரி 25) உயிரிழந்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மண்ணுக்குள் அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
நார்டெவ் பில்டர்ஸ் நிறுவன ஊழியரான அந்த ஆடவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் ஒருவர் அறிவித்தார்.
ஒரு காலத்தில் கிளிஃபர்ட் சென்டர் அமைந்திருந்த அந்த இடத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சு கூறியது.
எண் 24 ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள அந்தக் கட்டுமானத் தளம், சிங்லேண்ட்டின் துணை நிறுவனமான எஸ்.எல்.பிராப்பர்ட்டிசால் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து நிறுவனம் மிகுந்த சோகம் அடைந்துள்ளதாக சிங்லேண்ட் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
“எங்களது பிரதான ஒப்பந்ததாரரான வோன் ஹப்புடன் சேர்ந்து, துக்கத்தில் உள்ள குடும்பத்தைத் தொடர்புகொண்டு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, இந்தச் சிரமமான நேரத்தில் ஆதரவு வழங்குவோம்,” என்றார் அப்பேச்சாளர்.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி வோ ஹப் நிறுவனத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாக, நில அகழ்வுக்கு அருகிலுள்ள தரை மதிப்பீடு செய்யப்பட்டு, தரை சரியும் அபாயங்களைத் தணிக்க அது போதுமான அளவு வலுவூட்டப்பட வேண்டும்.
“அண்மையில் பெய்த மழையைக் கருத்தில்கொண்டு, குறிப்பாக கனமழைக்குப் பிறகு, ஊழியர்களுக்குப் பணிச்சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அமைச்சு விவரித்தது.

