மின்னிலக்க வங்கிச் சேவைகளில் குறுஞ்செய்தி தகவலுக்குப் பதிலாக செயலி அறிவிப்புகளுக்கு மாறும்படி வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், செயலி அறிவிப்பு முறை கூடுதல் பாதுகாப்பானது.
கட்டணம் செலுத்துதல், பணப் பரிமாற்றம் போன்ற வங்கிச் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து செயலி அறிவிப்புகள், மின்னஞ்சல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தகவல் பெறுவார்கள் என ஓசிபிசி வங்கி கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுவரை பயன்படுத்தி வந்த குறுஞ்செய்தி அறிவிப்புகள் இனி பயன்படுத்தபட மாட்டா எனவும் அது மேலும் குறிப்பிட்டது.
குறுஞ்செய்தி நெறிமுறைகள் 30 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அக்காலகட்டத்தில் இணையப் பாதுகாப்பு தற்போது இருப்பதைவிட மிகவும் வேறுபட்டிருந்தது என்றும் சினோப்சிஸ் சாஃப்ட்வேர் இன்டெகிரிட்டி குழுமத்தின் பாதுகாப்புப் பொறியியல் துறை இயக்குநர் கெல்வின் லிம் கூறினார்.
குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்புவது மிகவும் பாதுகாப்பற்றது எனவும் அவை மறையாக்கம் இல்லாதவை எனவும் திரு லிம் சொன்னார்.
இதனால், மோசடிக்காரர்கள் பயனாளருக்குத் தெரியாமல் வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்திகளின் உள்ளடக்கத்தைப் படிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், செயலி அறிவிப்புகள் மறையாக்கம் செய்யப்பட்டு வங்கியிலிருந்து அவை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பப்படுகின்றன எனவும் மோசடிக்காரர்கள் ஊடுருவி வங்கிகளின் செய்திகளைப் படிக்க முடியாது எனவும் திரு லிம் விளக்கினார்.
குறுஞ்செய்திகளில் இருந்து செயலி அறிவிப்புகளுக்கு மாறுவதன் மூலம் வங்கிகள் குறிப்பிடத்தக்க சேமிப்பையும் பெற முடியும்.

