சிங்கப்பூரில் நிகழ்ந்த ஆகப் பெரிய பண மோசடி வழக்குத் தொடர்பில் முன்னாள் வங்கி ஊழியருக்கு ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாங் சிமிங், 28, 2021ஆம் ஆண்டு அம்பலமான $3 பில்லியன் பண மோசடி வழக்கில் போலி ஆவணங்கள் தயாரித்தது, பண மோசடியில் ஈடுபட்டது, நீதிக்குத் தடையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சீனாவைச் சேர்ந்த வாங், 2023ஆம் ஆண்டு பண மோசடி தொடர்பில் கைதான கம்போடிய நாட்டைச் சேர்ந்த சூ பாவ்லினுக்கு வந்த நிதியை மூடிமறைக்க போலியான ஆவணங்களைத் தயாரித்தார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வாங் ஷுய்மிங் என்ற நபர் $1 மில்லியனைத் தமது சிட்டிபேங் கணக்கில் போட வகைசெய்யும் போலி ஆவணத்தைத் தயாரித்தது ஆகிய குற்றச்சாட்டுகளும் வாங்மீது சுமத்தப்பட்டன.
வாங்கிற்குத் தண்டனை வழங்குவதற்குமுன் ஆறு குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிட்டிபேங் வங்கியில் வாடிக்கையாளர்களை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த வாங், 2021 டிசம்பரில் சு பாவ்லின்னுடன் இணைந்து செயலாற்றத் தொடங்கினார்.
பண மோசடியுடன் சம்பந்தப்பட்ட 10 வெளிநாட்டினருக்கும் கடந்த ஆண்டு 13லிருந்து 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாங்கின் பெயர் முன்கூட்டியே வெளியிடப்படவில்லை என்றபோதும் பண மோசடி விசாரணையில் போலி ஆவணங்கள் குறித்த சந்தேகம் எழுந்ததை நீதிமன்றம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சு பாவ்லின்னுக்கும் வாங்கிற்கும் இடையில் தனிப்பட்ட சம்பந்தம் இருந்தது என்றும் அதில் சிட்டிபேங் தளங்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கிக் கணக்கில் போடப்படும் பணத்திற்காக கடன் பத்திரம் ஒன்றை உருவாக்கும்படியும் சு பாவ்லின் வாங்கிடம் கூறினார்.
வாங் அதற்கு இணங்கி போலி ஆவணங்களைத் தயாரித்தார்.
ஒரு வாரம் கழித்து மின்னிலக்க நாணய விற்பனை மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி சு பாவ்லின் வாங்கிடம் கூறினார்.
அதையடுத்து வாங் $481,678 ரொக்கத்தை விற்பனை முகவர் ஒருவரிடமிருந்து பெற்று சிங்கப்பூரில் தங்கியிருந்த சு பாவ்லின்னிடம் ஒப்படைத்தார்.

