உள்ளூர் வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதை மறுஆய்வு செய்கின்றன. தற்போதுள்ள நடைமுறைகள் மாறக்கூடும் என்று அவை டிசம்பர் 19ஆம் தேதி தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்தன.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ஏக்ரா) ‘பிஸ்ஃபைல்’ (Bizfile) இணையவாசலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் அடையாள அட்டை எண்கள் வெளியானதால் எழுந்த பாதுகாப்பு குறித்த கவலைகளை அடுத்து அவற்றின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்பவர்கள், வங்கிகளை ஏமாற்றுவது தொடர்பான கவலைகளைப் போக்கும் வகையில், சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (ஏபிஎஸ்) அடையாள அட்டை எண்களை மட்டும் பணம் செலுத்துவதற்கும் நிதிப் பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்று கூறியது.
அவ்வாறு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளுக்குள் நுழைய, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் அல்லது அங்க அடையாள அங்கீகாரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
அதிக மதிப்புள்ள நிதிப் பரிமாற்றங்கள் அல்லது பணம் பெறும் புதியவர்களைச் சேர்ப்பது போன்ற அதிக அபாயமுள்ள நடவடிக்கைகள் மேலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஏபிஎஸ் தெரிவித்துள்ளது.
“ஒரு மோசடியை முறியடிப்பது போன்ற அவசர சூழ்நிலைகளில், உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களை விரைவாகக் கண்டறிய சில வங்கிகள் அடையாள அட்டை எண்களை ஏற்கின்றன.
“அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதில் வங்கிகள் தங்கள் நடைமுறைகளை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றன. தற்போதுள்ள சில நடைமுறைகள் மாற்றப்படலாம் என்பதில் வாடிக்கையாளர்களின் புரிதலை நாங்கள் நாடுகிறோம்,” என்றும் ஏபிஎஸ் கூறியது.
தங்கள் அடையாள அட்டை எண்கள், அவர்களின் பெயர்கள், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களைத் தங்கள் கடவுச்சொற்களாகப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், அவற்றை மாற்ற வேண்டும் என்று அது மேலும் கூறியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
காப்புறுதி நிறுவனங்கள் தங்கள் காப்புறுதித் திட்ட உரிமையாளர்கள் புதிய திட்டங்களை வாங்கவோ, அவற்றை மீட்டுக்கொள்ளவோ அல்லது ஏற்கெனவே உள்ள திட்டங்களை மாற்றவோ அல்லது உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கவோ அடையாள அட்டை எண்களை மட்டும் பயன்படுத்த முடியாது என்று உறுதியளித்தன.
பரிந்துரைக்கப்பட்ட பயனாளியை மாற்றுவதற்கு அடையாள அட்டை எண்களை மட்டும் பயன்படுத்த முடியாது. மேலும், காப்புறுதித் திட்ட வழங்கீடுகளைப் பெறுவதற்காகக் காப்புறுதி நிறுவனத்திடம் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குத் தகவலை மாற்ற முடியாது என்று சிங்கப்பூர் பொதுக் காப்புறுதிச் சங்கமும் ஆயுள் காப்புறுதிச் சங்கமும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.