மோசடிகளை முறியடிக்க வங்கிகள், இணையத்தளங்கள் கூடுதல் முயற்சி

2 mins read
99fa42aa-8da8-4481-a90e-2828283df232
சிங்கப்பூரில் உள்ள வங்கிகளும் மின்வர்த்தகத் தளங்களும் மோசடிக்கு எதிரான நடைமுறைகளை வலுப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள வங்கிகளும் மின்வர்த்தகத் தளங்களும் மோசடிக்கு எதிரான நடைமுறைகளை வலுப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளன.

அடையாளச் சோதனைகளைக் கடுமையாக்கியது, செயலி மூலம் அறிவுறுத்தல்கள் அனுப்புவது, பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்களை அனுப்புவது ஆகியவை மின் வர்த்தகங்களும் வங்கிகளும் மேற்கொண்ட சில நடவடிக்கைகள்.

கரோசல் போன்ற தளங்கள் ஆண்டிறுதி காலத்தில் இசைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளும் நினைவுச்சின்னப் பொருள்களுக்கான தேவையும் கணிசமாக அதிகரிக்கும் என்றது. எனவே வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு எளிதில் ஏமாறக்கூடும் என்று அது குறிப்பிட்டது.

அதை முறியடிக்க கரோசல், சிங்பாஸ் சோதனையை மேலும் கடுமையாக்கியது. நேரடிக் கட்டணங்கள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கு கரோசல் தளம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகம் செய்தது.

இருப்பினும், மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் மோசடிகளைத் தடுப்பது இன்னும் சவாலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒசிபிசி போன்ற வங்கிகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் செயலியில் அறிமுகம் செய்துள்ளன. உண்மையான வங்கி ஊழியர்களையும் மோசடிகளையும் கண்டறிய அந்த அம்சங்கள் கைகொடுக்கின்றன.

செயலி மூலம் பணத்தைப் பூட்டிவைக்கும் வசதி, கில்-ஸிவிச் அம்சம் ஆகியவற்றால் கடந்த ஆண்டு $10.5 மில்லியன் தொகையை மோசடிக்கு இழக்காமல் ஒசிபிசி வங்கியால் தடுக்க முடிந்தது.

குறுஞ்செய்தி வழி ஒரு முறை கடவுச்சொல் வழங்கும் சேவையையும் வங்கி கைவிட்டதை அடுத்து கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மோசடி தொடர்பான சம்பவங்கள் 98 விழுக்காடு குறைந்தன.

டிபிஎஸ், பிஓஎஸ்பி ஆகிய வங்கிகள் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பணத்தை அனுப்பும்முன் நிதானமாக யோசித்து அதன் பின் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தின.

சிங்கப்பூரில் புகார் செய்யப்பட்ட ஒட்டுமொத்த மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தன என்றும் மொத்த நிதியிழப்பும் சரிந்தது என்றும் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.

கடந்த ஆண்டின் முற்பாதியில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 26 விழுக்காடு குறைந்து 19,665ஆகப் பதிவானது. மொத்தமாக இழந்த பணமும் 12.6 விழுக்காடு சரிந்தது.

குறிப்புச் சொற்கள்