ஈடு இல்லாத புதிய கடன்களுக்கான விண்ணப்பத்தில், மத்திய சேமநிதி லைஃப் திட்டத்தின் வழங்கீடுகளை ஓய்வுபெற்றவர்களின் வருவாயாக வங்கிகள் கருதலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
65 வயதைக் கடந்த ஓய்வுபெற்றவர்கள், கடன்பற்று அட்டை போன்ற ஈடு இல்லாத கடன் வசதிகளைப் பெற அவர்களின் வருடாந்தர வருவாய் $15,000 அல்லது அதற்குமேல் இருக்க வேண்டும் என்று ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளது.
மத்திய சேம நிதி லைஃப் திட்டத்தின்கீழ் மாதாந்தர வழங்கீடுகளைப் பெறும் மூத்தோரும் அதற்குத் தகுதிபெற முடியும்.
கடன் பெறுவோரின் தகுதியை மதிப்பிடுவதற்கான வருவாய் இதுதான் என்று ஆணையம் எதனையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும், வாடகை, வட்டி, ஈவுத்தொகை, மத்திய சேம நிதி லைஃப் திட்டம் அல்லது தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் வருடாந்தர வழங்கீடுகள் போன்றவற்றை ஓய்வுபெற்றவர்களின் வருவாயாக வங்கிகள் கருதலாம் என்று அது தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்றவர்களின் கடன் தகுதி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கருத்துமன்றத்தில் இடம்பெற்றது.
பிரயன் யிம் எனப்படும் 64 வயதான ஓய்வுபெற்றவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை அதில் பகிர்ந்துகொண்டார்.
டிரஸ்ட் வங்கியின் கடன்பற்று அட்டை வழங்கும் $2,000 கடன் வரம்பை வெளிநாட்டு விடுமுறைப் பயணச் செலவுக்காக அதிகரிக்க விரும்பியபோது அந்த அட்டையை டிரஸ்ட் வங்கி ரத்து செய்துவிட்டதாக திரு பிரயன் கூறியிருந்தார்.