தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கிளிக்’ செய்யக்கூடிய இணைப்புகளை வங்கிகள் அனுப்பாது: காவல்துறை, டிபிஎஸ்

2 mins read
மோசடி மூலம் இரண்டு வாரங்களில் $446,000 இழப்பு
73a1c298-b3a9-4b90-ad7d-b8731e5b5731
மோசடிக்காரர்கள் அனுப்பிய குறுந்தகவல்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ‘கிளிக்’ செய்யக்கூடிய இணைப்புகளைக் குறுந்தகவல்களின் மூலம் அனுப்புவதில்லை என்று சிங்கப்பூர் காவல்துறையும் (எஸ்பிஎஃப்) டிபிஎஸ் வங்கியும் ஜனவரி 14ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தின.

வங்கிகள் அல்லது வங்கி அதிகாரிகள் போல் பாசாங்கு செய்யும் மோசடிச் சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அதிகரித்து வருகின்றன.

இச்சம்பவங்களில் குறுந்தகவல்களின் மூலம் வங்கிப் பரிவர்த்தனைக்கான ஒருவரது ரகசியத் தகவல்களை மோசடிப் பேர்வழிகள் பெறுவதில் குறியாய் உள்ளனர்.

புதிய ஆண்டு தொடங்கி முதல் இரண்டு வாரங்களில் குறைந்தது 219 பேர் ஒட்டுமொத்தமாக $446,000ஐ இழந்துள்ளதாக எஸ்பிஎஃப், டிபிஎஸ் இரண்டும் அவற்றின் கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனவரி மாதத்தில் காவல்துறையினர் வெளியிடும் இரண்டாவது எச்சரிக்கை இது.

வெளிநாட்டுத் தொடர்பு எண்கள், உள்ளூர் தொடர்பு எண்கள் போன்ற தகவல்களைத் தாங்கிய இந்தக் குறுந்தகவல்களில், டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கியைப் பிரதிநிதிப்பதாக அந்த மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்வர்.

பொதுமக்களின் டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிக் கணக்குகளை அடைவதற்கு அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் நடப்பது குறித்து இந்த மோசடிக்காரர்கள் எச்சரிக்கை விடுப்பதாகவும் இருக்கும்.

அடுத்து, குறுந்தகவலில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி அடையாளத்தை உறுதிப்படுத்தி அந்தப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு கூறப்படும்.

ஆனால், இணைப்பை சொடுக்கும்போது, அது போலி டிபிஎஸ் வங்கி இணையத்தளங்களுக்கு இட்டுச் செல்லும்.

இணைய வங்கிப் பரிவர்த்தனைக்கான தகவல்களை ஒருவர் உள்ளிட்ட பிறகு, அவற்றைக் கொண்டு மோசடிக்காரர்கள் பின்னர் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

மோசடிக்கு ஆளானதாக சந்தேகப்படும் வாடிக்கையாளர்கள் 1800-339-6963 என்ற தொடர்பு எண்ணில் டிபிஎஸ் வங்கிக்குத் தெரிவிக்கலாம். ‘ஸ்கேம்ஷீல்டு’ செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்