தடை விதிக்கப்பட்டோர்க்கு சூதாட்டக் கூடங்களில் அனுமதி: தணிக்கையில் அம்பலம்

தடை விதிக்கப்பட்டோர்க்கு சூதாட்டக் கூடங்களில் அனுமதி: தணிக்கையில் அம்பலம்

2 mins read
bacb5e3a-1dc0-4b6f-a01d-51ce5b7b1771
தடைவிதிக்கப்பட்டிருந்த 120 பேர் மரினா பே சேண்ட்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் உள்ள இரண்டு சூதாட்டக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டது தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (ஏஜிஓ) கண்டறிந்த குறைபாடுகளில் சூதாட்டம் தொடர்பானவைகளும் அடங்கியுள்ளன.

சூதாட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளால், தடை விதிக்கப்பட்ட பலர் சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

2023 ஏப்ரல் 1க்கும் 2025 மார்ச் 31க்கும் இடையில் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன. தடை விதிக்கப்பட்டிருந்த 120 பேர் மரினா பே சேண்ட்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் உள்ள இரண்டு சூதாட்டக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 107 பேர் 1,100 முறை சூதாட்டக் கூடங்களுக்குச் சென்றனர். பின்னர், அது பற்றி சிங்கப்பூர் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்திடம் சூதாட்டக்கூட நிர்வாகங்கள் புகார் அளித்தன.

ஆயினும், 108 முறை நுழைந்த 13 பேர் பற்றி புகார் அளிக்கப்படாதது ஆணையத்தில் நடத்தப்பட்ட தணிக்கையின்போது தெரிய வந்ததாக ஏஜிஓ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவை தவிர, சூதாட்டக் கூடங்களுக்குள் மாதாந்தர வருகை வரம்பை மீறி 26 பேர் அனுமதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. வரம்புக்கு அப்பாற்பட்டு 102 முறை அவர்கள் அந்தக் கூடங்களுக்குள் நுழைந்தனர்.

மேலும், சூதாட்டத் தடை விதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் பூல்ஸில் வைத்துள்ள 79 கணக்குகள் மூடப்படவில்லை. இணையம் வாயிலான பந்தயச் சேவைகளில் அவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க அவை மூடப்பட்டிருக்க வேண்டும்.

தணிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்தில், தடைவிதிக்கப்பட்ட 21 பேர் $75,800 மதிப்புள்ள 1,358 பந்தயப் பிடிப்புகளைச் செய்ததையும் ஏஜிஓ கண்டறிந்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்நிலையில், தவறுகள் நடந்ததற்கான சூழலை சிங்கப்பூர் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையமும் சூதாட்டப் பிரச்சினைகளுக்கான தேசிய மன்றத்தை நிர்வகிக்கும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் விளக்கியுள்ளன.

சூதாட்டக்கூட வருகைகள் பதிவாகாமல் போனதற்கு தரவு இடமாற்றச் சிக்கல்களும் தானியக்கக் கண்காணிப்பைப் பாதித்த கணினி அமைப்பு சார்ந்த இதர பிரச்சினைகளும் காரணங்கள் என்றன அவை.

இருப்பினும், அந்தக் கோளாறுகள் 2026 பிப்ரவரியில் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த அரசாங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்