‘தி இந்தியன் பார்பர் ஷாப்’ எனும் முடிதிருத்தகம் 70 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோருக்கும் உடற்குறை மற்றும் அறிவுத்திறன் குன்றிய அனைத்து வயதினருக்கும் தொடர்ந்து இலவசமாக முடிதிருத்தும் சேவையை வழங்கி வருகிறது.
வாடகையுடன் இதர வர்த்தகச் செலவுகளும் அதிகரித்தபோதிலும், 2024ஆம் ஆண்டில் மூன்று முடிதிருத்தும் கடைகளை மூடும் நிலை ஏற்பட்டபோதிலும் சமூகத்துக்கு வழங்கும் இச்சேவையை இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 46 வயது திரு வீரப்பன் முத்துக்குமரன் நிறுத்தவில்லை.
‘தி இந்தியன் பார்பர் ஷாப்’ நிறுவனம் தற்போது ஐந்து முடிதிருத்தும் கடைகளை நடத்தி வருகிறது.
லிம்பாங் ஷாப்பிங் சென்டர், 321 கிளமெண்டி மால் கடைத்தொகுதி, செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றம், புளோக் 440 பாசிர் ரிஸ் டிரைவ் 4, துவாஸ் வட்டாரத்தில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதி ஆகிய இடங்களில் ‘தி இந்தியன் பார்பர் ஷாப்’ முடிதிருத்தகங்கள் இயங்கி வருகின்றன.
இடத்தைப் பொறுத்து அதன் முடிதிருத்தும் சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அது $10க்கும் $12க்கும் இடைப்பட்டிருக்கும்.
60 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர், சிங்கப்பூர் மக்களால் தாம் வளர்ச்சி அடைந்ததாகவும் சமூகத்துக்குத் தம்மால் முடிந்த அளவுக்குத் திருப்பித் தர இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் திரு வீரப்பன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தி இந்தியன் பார்பர் ஷாப் கடைகளில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 20லிருந்து 30 பேருக்கு இலவசமாக முடிதிருத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது மாதத்துக்கு $5,000லிருந்து $6,000 வரையிலான வருமானத்துக்குச் சமம்.
இலவச முடிதிருத்தும் சேவை வழங்கும் ‘தி இந்தியன் பார்பர் ஷாப்’பிற்கு மூத்தோர் பலர் நன்றி தெரிவித்திருப்பதாக அங்கு பணியாற்றும் மலேசியரான 45 வயது திரு விஷ்ணு விஜேந்திரன் தெரிவித்தார்.
அவர்களில் சிலர் நன்றி தெரிவித்துக்கொள்ளும் வகையில் சிறு தொகை கொடுப்பதுண்டு என்றும் மற்றவர்கள் முடிதிருத்துபவர்களுக்கு காப்பி அல்லது பலகாரங்கள் வாங்கித் தருவர் என்றும் அவர் கூறினார்.
“ஒருமுறை, தொடர்புத்திறன் குறைபாடு (ஆட்டிசம்) உள்ள சிறுவனுக்கு முடிதிருத்த மலாய்ப் பெண் ஒருவர் கடைக்கு வந்தார். அவரது மகனுக்கு இலவசமாக முடிதிருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டதும் அவர் அழுதார். தமது மகனுக்கு இதுவரை யாரும் இலவசமாக முடிதிருத்தியதில்லை என்று அவர் மனம் நெகிழ்ந்தார்,” என்று திரு விஜேந்திரன் தெரிவித்தார்.
‘தி இந்தியன் பார்பர் ஷாப்’ நிறுவனத்தின் உரிமையாளரான திரு வீரப்பனின் பூர்வீகம் சென்னை.
விஞ்ஞானியாகப் பணியாற்ற தமது மனைவிக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்ததை அடுத்து, 2010ஆம் ஆண்டில் அவருடன் திரு வீரப்பன் சிங்கப்பூருக்கு வந்தார்.

