ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளில் உள்ள பாத்தாமில் எட்டோமிடேட் கலந்த 40 மின்சிகரெட் பொட்டலங்களைக் கடத்த முயன்ற சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அந்நாட்டின் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 3ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட கடைசிப் படகு பாத்து அம்பார் மாவட்டத்தில் உள்ள துறைமுகப் படகு முனையத்தைச் சென்றடைந்தபோது, டபிள்யூஎஸ்பி என அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பெண் பாத்தாமின் சுங்க, கலால் அலுவலக அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டதாகப் பாத்தாம் சுங்க அலுவலகத்தின் அமலாக்க, விசாரணைப் பிரிவுத் தலைவர் லக்கி தாமோ தெரிவித்தார்.
“மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதப் பொருள்களை நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார் அவர்.
பாத்தாம், ரெம்பாங் மற்றும் கலாங் (பாரேலாங்) காவல்துறை தலைமையகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களைக் கடந்த வியாழக்கிழமை அழித்தபோது, திரு லக்கி அந்தத் தகவலை வெளியிட்டார்.
“ஆய்வகச் சோதனையில் திரவத்தில் போதைப்பொருள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது,” என்று அவர் சொன்னார்.
கடத்தப்பட்ட பொருள்கள் சந்தேக நபரின் தொடைப் பகுதியில் கட்டப்பட்டிருந்ததைச் சுங்க அலுவலகத்தின் தகவல் சேவைப் பிரிவுத் தலைவர் செத்தியவான் ரோசிடியும் உறுதிப்படுத்தினார்.
“மின்சிகரெட் பயன்பாட்டுக்கும் விநியோகத்திற்கும் எதிராகச் சிங்கப்பூரில் பெரிய அளவில் இயக்கமும் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து அவர் தப்பித்துவிட்டார்,” என்று ஜகார்த்தா போஸ்ட் ஊடகத்திடம் அவர் தெரிவித்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், இந்த விவகாரம் குறித்துச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிடம் மேல்விவரங்களைக் கேட்டுள்ளது.
