பாத்தாம் சாலை விபத்து; 62 வயது சிங்கப்பூரர் உயிரிழப்பு

பாத்தாம் சாலை விபத்து; 62 வயது சிங்கப்பூரர் உயிரிழப்பு

படம்: BATAMNEWSONLINE/இன்ஸ்டகிராம்

09 Mar 2026 - 7:51 pm

1 mins read

இந்தோனீசியாவின் பாத்தாமில் கடந்த மார்ச் 4ஆம் தேதி லாரி மோதி 62 வயது சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.

‘டாப் 100 ஜோடோ’ கடைத்தொகுதிக்கு வெளியே அந்த விபத்து பிற்பகல் நேரத்தில் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இணையத்தில் பரவிய காணொளியில், பச்சை நிற லாரிக்கு அருகில் இருவர் சிக்கியிருப்பதைக் காணமுடிந்தது. லாரியின் முன்புறம் சேதமடைந்திருந்தது.

சில வழிப்போக்கர்கள் சிக்கியிருந்தவர்களை மீட்க முயற்சி செய்ததையும் பார்க்கமுடிந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த ஆடவர் பாத்தாமில் உள்ள கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.

விபத்து நேர்ந்தபோது, அவர் மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததாக அந்த நாளிதழ் கூறியது. அவரும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநரும் லாரியின் சக்கரங்களில் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 62 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஷின்மின் கூறியது.

அந்த ஆடவரின் உடலைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதற்கு உதவ, பாத்தாமில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகம் அவரின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

குறிப்புச் சொற்கள்
லாரிஆடவர்சாலை விபத்துஉயிரிழப்புபாத்தாம்சிங்கப்பூரர்