சுபாங்கிலிருந்து சிங்கப்பூருக்குப் பறக்கும் பத்திக் ஏர்

2 mins read
e8aaaabb-74ac-4588-8b3b-f7f957ccfc05
பத்திக் ஏர் நான்கு புதிய சேவைகளைத் தொடங்கியிருக்கிறது. - கோப்புப் படம்: பெர்னாமா

சுபாங்: மலேசியாவின் சுபாங் விமான நிலையத்திலிருந்து நான்கு புதிய சேவைகளை பத்திக் ஏர் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர், ஜகார்த்தா, ஜோகூர், லங்காவி ஆகிய இடங்களுக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பத்திக் ஏர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தெரிவித்தது.

புதிய விமானச் சேவை விரிவாக்கத்தால் விமானப் பயணிகளுக்கு ஒரு வசதியான வாயிலாக சுபாங்கின் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையம் வலுவடையும் என்று அந்த விமான நிறுவனம் கூறியது.

பத்திக் ஏர் நிறுவன சந்தைமயப் பிரிவின் தலைவரான பவானி வீரைய்யா, சுபாங் விமான நிலையம் மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் வர்த்தகப் பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என்றார்.

“சுபாங் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்துவருகிறது. அதன் வளர்ச்சியில் நாங்களும் பங்கு வகிப்பதில் பெருமைப்படுகிறோம்,” என்று வெள்ளிக் கிழமை (டிசம்பர் 12) புதிய விமானச் சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுற்றுலாத் துறை, பொருளியல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நவீன நகரத்தின் விமான நிலையமாக சுபாங்கை நிலைநிறுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கும் விமானச் சேவை விரிவாக்கம் ஆதரவளிக்கும் என்றார் அவர்.

‘விசிட் மலேசியா 2026’ விளம்பரப் பிரச்சாரம் நெருங்கி வருகிறது. இந்தத் தருணத்தில் புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

பத்திக் ஏர், ஏற்கெனவே சுபாங்கிலிருந்து பினாங்கு, கோத்தா பாரு, கோத்தா கினபாலு, கூச்சிங், பேங்காக் ஆகிய இடங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

புதிய வழித்தடங்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் ‘12.12 மிகப்பெரிய சேமிப்பு’ என்ற பெயரில் சலுகைத் திட்டம் ஞாயிற்றுக் கிழமை வரை அமலில் இருக்கும். 2026 ஜூன் வரை செல்லுபடியாகும் பயணங்களுக்கு இந்தச் சலுகையின்கீழ் தற்போது முன்பதிவு செய்யலாம் என்று பத்திக் ஏர் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்