சிங்கப்பூர் - ஈப்போ இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியது ‘பத்திக் ஏர்’

2 mins read
0279dc96-a219-4368-a38c-6417fff1beed
2025 ஜூலை 3ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், சாங்கி விமான நிலையத்தில் ‘பத்திக் ஏர்’ விமானம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் மலேசியாவின் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவுக்கும் இடையே நேரடி விமானச் சேவையை ‘பத்திக் ஏர்’ நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் ஈப்போவில் மருத்துவ சிகிச்சை பெற சிங்கப்பூரிலிருந்து கூடுதலானோரை ஈர்க்க பேராக் அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

குறைந்த செலவில் விரிவான மருத்துவப் பரிசோதனைகளை நாடும் சிங்கப்பூரர்களுக்கு ஒரு மாற்றுத் தெரிவாக ஈப்போ விளங்குவதாக பேராக்கின் பயணத்துறை, தொழில், முதலீடு, பயணப் பாதை மேம்பாட்டுக் குழுத் தலைவர் லோ ஸி யீ கூறினார்.

சிங்கப்பூரில் இருப்பதைவிட ஈப்போவில் ஒரு வாரயிறுதியைக் கழிப்பதன் மூலம் செலவு கட்டுப்படியாக இருப்பதாகப் பலரும் தம்மிடம் கூறியதை அவர் சுட்டினார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல் விமானப் பயணிகளை திரு லோ வரவேற்றுப் பேசினார்.

“சிங்கப்பூரர்கள் ஈப்போவில் உள்ள ஹோட்டல்களில் தங்கி, உணவை ருசித்து, அதேவேளையில் விரிவான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம். இவை அனைத்தையும் கட்டுப்படியான செலவில் செய்து முடிக்கலாம்,” என்றார் அவர்.

தற்போது ஈப்போவில் பிரசித்திபெற்ற பலவகை மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதாக திரு லோ தெரிவித்தார். சன்வே மருத்துவ நிலையம், கேபிஜே ஈப்போ, பேராக் சமூக நிபுணத்துவ மருத்துவமனை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

சிங்கப்பூர்-ஈப்போ இடையே இப்போது கூடுதலான நேரடி விமானச் சேவைகள் வழங்கப்படுவதால், சிங்கப்பூரர்களுக்கு வசதியான, விலைக் கட்டுப்படியான மருத்துவப் பயணத்துறை நடுவமாக ஈப்போவை நிலைநிறுத்த பேராக் விரும்புவதாக திரு லோ சொன்னார்.

அந்த வகையில் இந்த விமானச் சேவையின் தொடக்கம், பத்திக் ஏருக்கு மட்டுமன்றி பேராக்கின் விமானப் போக்குவரத்து, சுற்றுப்பயணத் துறைகளுக்கு முக்கியத் தருணமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூரிலிருந்து வருவோரே முதலிடத்தில் இருப்பதாக திரு லோ தெரிவித்தார்.

தற்போது, சிங்கப்பூரின் ஸ்கூட் நிறுவனமும் ஈப்போவுக்கு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது.

ஏர்ஏஷியா நிறுவனம், கடந்த மே மாதம் அதன் சிங்கப்பூர்-ஈப்போ விமானச் சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்தது. செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய, சிங்கப்பூர்-ஈப்போ உள்ளிட்ட 17 பயணப் பாதைகளை அது தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

குறிப்புச் சொற்கள்