பாதசாரிகளுக்கான பாதை விதிமுறைகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்துகொள்வார்கள் என்பதால் சைக்கிள் ஓட்டிகள் கவலைப்படத் தேவையில்லை என்று போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங் உறுதியளித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டிகள் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
ஜூலை 2ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பாதசாரிகளுக்கான பாதையில் மற்றவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் வேகமாக ஓட்டும் சைக்கிள் ஓட்டிகள்மீதே கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் முழுவதும் ‘கிக் ஸ்கூட்டர்’ போன்ற இயந்திரமில்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் பாதசாரிகளுக்கான பாதையில் வாகனத்தை ஓட்டினால் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாதைகள் பாதசாரிகளுக்கு மட்டும் என்ற குறிப்பு எழுதப்பட்டிருக்கும்.
சைக்கிள் செல்லும் பாதைகளுக்கு சிவப்புச் சாயம் பூசப்பட்டிருக்கும்.
“புதிய மாற்றத்தால் சைக்கிளோட்டிகளின் கவலை எனக்குப் புரிகிறது. தங்களை இலக்காக வைத்து அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலைப்படுகின்றனர்,” என்று திரு பே யாம் கெங் சொன்னார்.
இந்த நிலையில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அமலாக்க அதிகாரிகள், கள நிலைமையை கருத்தில்கொண்டு செயல்படுவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உதாரணமாக பாதுகாப்புக் கருதி, தடைகளைத் தவிர்ப்பதற்காக சைக்கிளோட்டிகள் பாதசாரிகளுக்கான பாதையில் சென்றால் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.