அதிகரிக்கும் மின்படிக்கட்டு விபத்துகள்: வழிகாட்டியை அறிமுகப்படுத்திய பிசிஏ

அதிகரிக்கும் மின்படிக்கட்டு விபத்துகள்: வழிகாட்டியை அறிமுகப்படுத்திய பிசிஏ

படம்: ஃபிரேசர்ஸ் பிராப்பர்ட்டி

20 Nov 2026 - 10:30 pm

2 mins read

சிங்கப்பூரின் கடைத்தொகுதிகள் போன்ற பல இடங்களில் இயங்கும் மின்படிக்கட்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகப்படியான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தவும் அவற்றைப் பயன்படுத்துவோருக்கு ஆதரவு நல்கவும் கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) புதிய துறைசார்ந்த வழிகாட்டி புத்தகத்தைத் தயாரித்துள்ளது.

பொதுமக்கள் உட்பட மின்படிக்கட்டுகளின் உரிமையாளர்கள், அவற்றை நிர்வகிக்கும் முகவர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோர் மின்படிக்கட்டுகளின் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ளும் அவசியம் எழுந்துள்ளதாலும் ஆணையம் அதனை வடிவமைத்துள்ளது என்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) அது தெரிவித்தது.

மின்படிக்கட்டுகளின் கைவைக்கும் பிடிகளின் வேகத்தைக் கண்காணித்தல், உச்ச பயன்பாட்டு வேளைகளில் பாதுகாப்புத் தூதர்களை நியமித்தல் போன்றவை நல்ல நடைமுறைகளில் அடங்கும்.

மின்தூக்கி உரிமையாளர்களின் சட்டப்பூர்வக் கடமைகள், பராமரிப்புப் பணிகளுக்கான குத்தகையாளரையும் சேவைத் தொகுப்புகளையும் முறையாகத் தேர்வு செய்தல், பழைய மின்தூக்கிகளை நவீனமாக்குதல் போன்ற பல அம்சங்கள் வழிகாட்டியில் விளக்கப்பட்டுள்ளன.

விழாக்காலங்களில் பயனீட்டாளர்களின் அளவு பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த வழிகாட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆணையத் தரவுகளின்படி, ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் நடந்த 745 சம்பவங்களில் 97 விழுக்காடு மின்படிக்கட்டுகளின் பயன்பாடு சார்ந்தே நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே போக்கு தொடர்ந்துள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

கடந்த 2024 முதல் 2025 வரையிலான ஓர் ஆண்டில், மின்படிக்கட்டுகள் சார்ந்த ஏறத்தாழ 900 சம்பவங்கள் குறித்த அறிக்கைகளை ஆணையம் பெற்றுள்ளது.

அவற்றில் 69 விழுக்காட்டுச் சம்பவங்கள் எம்ஆர்டி நிலையங்களிலும் 23 விழுக்காடு கடைத்தொகுதிகளிலும் நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்