சாப்பிட்ட பிறகு மேசை மீது உள்ள தட்டுகளை மக்கள் அப்புறப்படுத்துவதில்லை என்று புகார்கள் எழுந்ததை அடுத்து, தேக்கா உணவு நிலையத்தில் தேசிய சுற்றுப்புற வாரியம் புதிதாகக் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதற்காக வாரியத்திற்குக் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் எம்.பி.யுமான ஆல்வின் டான் நன்றி தெரிவித்து அண்மையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
குப்பை போடுவோரைக் கையும் களவுமாகப் பிடிக்கவும் பிரச்சினையாக உள்ள அம்சங்களைக் கண்டறியவும் இந்தக் கருவிகள் ஆதாரம் சேகரிக்க வல்லவை என அவர் குறிப்பிட்டார்.
சாப்பிட்டு முடித்ததும் தட்டுகளை வைப்பதற்கான பகுதிக்கு அருகில் ஒரு கண்காணிப்பு கேமராவும் மக்கள் அமர்ந்து சாப்பிடும் பகுதியை நோக்கியபடி ஒரு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதை ஷின் மின் டெய்லி நியூஸ் கண்டறிந்தது.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புகைபிடித்தல், குப்பை போடுதல் தொடர்பாக மொத்தம் 88 பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கும் வகையில் வாரியம் அறிவிப்புப் பலகைகளையும் அவ்விடத்தில் வைத்துள்ளது.
இருப்பினும், குப்பைகளே ஆக மோசமான பிரச்சினை என்று கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.
துப்புரவுப் பணியாளர்கள் காலை 7 மணிக்குத் தங்கள் வேலையைத் தொடங்கும்போது, தரை எங்கும் ஒரே குப்பைக்கூளமாக இருப்பதாகவும் அசுத்தமான உணவுத் தட்டுகள் அப்படியே கிடப்பதாகவும் 30 ஆண்டுகளாக ரொட்டிக்கடை நடத்தும் 65 வயது திரு யான் கூறினார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேக்கா உணவு நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிவதாகக் கூறிய பானக் கடைக்காரர் ஒருவர், மக்கள் பலமுறை தங்களது தட்டுகளையும் கோப்பைகளையும் அப்புறப்படுத்தாமல் விட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“துப்புரவுப் பணியாளர்கள் தங்களது வேலையை முடித்த பிறகு, யாருமே அக்கறை எடுத்து இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. இந்தக் கண்காணிப்புக் கருவிகளால் குப்பை போடுவது நிற்கும் என நம்புகிறேன்,” என்றார் மற்றொரு கடைக்காரர்.
மாலை வேளையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர்கள் சிலர் இருக்கைகளை விட்டு எழாமல் இருப்பதும் மது அருந்திவிட்டு போதையில் இருப்பதும் தங்களது உணவு உண்ணும் அனுபவத்தைப் பெரிதும் பாதிப்பதாகக் குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.