பீச் ரோட்டில் 2022ஆம் ஆண்டு மனைவியைச் சரமாரியாக வெட்டுக்கத்தியால் தாக்கிய ஆடவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் எட்டுப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. அச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடந்தது.
49 வயதாகும் செங் குவோயுவான், தன் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டை மே 20ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி ஹான் ஹோங்லியைக் (44 வயது) கொலை செய்யும் நோக்கம் தனக்கு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
திருவாட்டி ஹானின் முந்தைய திருமணத்தில் பிறந்த மகளிடம் (23 வயது) செங் தகாதமுறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது. அதற்காகத் தன்னை அவர் மன்னிக்கவில்லை, அச்சம்பவத்தை யாரிடமும் கூறப்போவதில்லை என்று உறுதிகூறவில்லை என்பதால் செங்கிற்குத் திருவாட்டி ஹான் மீது சினம் ஏற்பட்டது.
தாக்குதலில் திருவாட்டி ஹானின் இடது கை, கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது இடது கண் பார்க்கும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அவரது முகம் நிரந்தரமாக அலங்கோலமாகிவிட்டதாகவும் அவரது கைகள் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி ஹானின் வலக்கை விரல் நுனியை மருத்துவர்கள் வெட்டி எடுக்க நேரிட்டது.
வழிப்போக்கர்கள் தலையிட்டும், சில பொருள்களைத் தூக்கி எறிந்து தடுக்க முயன்றும் செங் தன் மனைவியைத் தாக்கியதை நிறுத்தவில்லை என்பதை நீதிபதி சுட்டினார்.
இருப்பினும் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கும்படி கேட்ட அரசாங்க வழக்கறிஞரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
செங்கிற்கு ஆயுள்தண்டனையும் எட்டு முதல் 12 பிரம்படிகளும் விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் கோரிய வேளையில், 15 ஆண்டுகள் சிறையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கும்படி செங்கின் வழக்கறிஞர் கோரினார்.