பணிப்பெண்ணிடம் அழகு ராணி வசைப்பேச்சு; அடிமைத்தனம் என்று கூறும் இணையவாசிகள்

பணிப்பெண்ணிடம் அழகு ராணி வசைப்பேச்சு; அடிமைத்தனம் என்று கூறும் இணையவாசிகள்

2 mins read
f85981ab-ed91-4588-9e2e-04fa8d8cc1d5
பணிப்பெண்ணைத் திட்டும் காணொளியை அந்த முதலாளியே பதிவு செய்திருந்தார் என்றது முகவை. - படங்கள்: ஸ்டோம்ப்

தமது இல்லப் பணிப்பெண்ணால் பல மனக்குறைகள் ஏற்பட்ட நிலையில், முதலாளி ஒருவர் மனிதவள அமைச்சையும் உள்துறை அமைச்சையும் அணுகத் திட்டமிட்டுள்ளதாக பணிப்பெண் சேவையை வழங்கிய ரிஜென்ட் பணிப்பெண் முகவை கூறியுள்ளது.

திருவாட்டி ‘எல்’ என்ற அந்த முதலாளி, இதற்குமுன் ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநித்துள்ளார். பல அழகுராணிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு சிறப்புப் பட்டத்தையும் வென்றார்.

இதற்கிடையே, திருவாட்டி ‘எல்’ பணிப்பெண்ணைத் திட்டுவதாக அமைந்த காணொளிப் பதிவை, பணிப்பெண் முகவை ஃபேஸ்புக் தளத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி பகிர்ந்திருந்தது. அந்தக் காணொளியை திருவாட்டி ‘எல்’ தாமே பதிவு செய்திருந்தார்.

காணொளியில் திருவாட்டி ‘எல்’ கேட்ட கேள்விக்குப் பணிப்பெண் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார். இதையடுத்து திருவாட்டி ‘எல்’ உரத்த குரலில் கத்தியதுடன் ஆங்கிலத்தில் “உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்.

சமூக ஊடகங்களில் தங்களின் முகவையைப் பற்றி அந்த முதலாளி சாடிப் பேசியுள்ளதாகவும் அது குறித்து தாங்களும் பதில் அளிக்க விரும்புவதாகவும் ஃபேஸ்புக் பதிவில் முகவை குறிப்பிட்டிருந்தது.

பணிப்பெண்ணின் மொழி ஆற்றல், செயல்பாடுகள் ஆகியவற்றால் அதிருப்தி அடைந்தார் திருவாட்டி ‘எல்’. பிரச்சினைகளைக் களைய முகவை எவ்வளவோ முயன்றும் பயனில்லாமல் போனது.

“மனிதவள அமைச்சர் டான் சீ லெங், உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா.சண்முகம் போன்றோருடன் தமது மனக்குறை குறித்து பேசப்போவதாக வாட்ஸ்ஆப் மூலம் திருவாட்டி எல் எங்களிடம் தெரிவித்தார்,” என்றது முகவை.

சமூக ஊடகப் பிரபலம் என்பதாலும் இதே பிரச்சினைகளைச் சந்திக்கும் மற்ற முதலாளிகளுடன் தமது அனுபவங்களை ஒளிவுமறைவின்றிக் கூறத் திட்டமிட்டுள்ளார் என்றும் திருவாட்டி ‘எல்’ கூறியதாக முகவை குறிப்பிட்டது.

பணிப்பெண்ணின் ஆற்றல், சம்பளம் தொடர்பில் திருவாட்டி ‘எல்’லுக்கு இருந்த எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க முகவர் எவ்வளவோ முயன்றதாக முகவை தெரிவித்தது.

மனநல ஆலோசனை அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்ததாகச் சொன்னது.

இதற்கிடையே, ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகும் தமது வேலைச் சூழலால் பணிப்பெண்ணுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த இக்கட்டான நிலையால் அந்தப் பணிப்பெண் முகவையின் உதவி கோரி அணுகி மீண்டும் தம் தாய்நாட்டுக்குத் திரும்புவதையும் கருதினார்.

பணிப்பெண்ணை மாற்றுதல், தாய்நாட்டிற்கு அனுப்பி வைத்தலுக்கான கட்டணங்கள் குறித்த முகவையின் விதிமுறைகளை திருவாட்டி ‘எல்’ அறிந்திருந்தார். இருப்பினும், அவரது மனக்குறையும் சாடலும் தொடர்ந்ததாக முகவை தெரிவித்தது.

“சமூக ஊடகப் பிரபலம், பட்டம் வென்றவர் என்ற முறையில் காணொளியில் இவ்வாறு நடந்துகொள்வது என்னை மிக ஆழமாகப் பாதித்துவிட்டது,” என்று ஸ்டோம்ப் வாசகர் ஒருவர் கூறினார்.

வீட்டில் இரு இளம் பிள்ளைகள் உள்ள அவர், இத்தகைய முறையில் நடந்துகொள்வது நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இல்லப் பணிப்பெண்களை இவ்வாறு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அது அடிமைத்தனத்திற்குச் சமம் என்றும் வாசகர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்