S$165 மில்லியன் மதிப்பில் விற்பனைக்கு வரும் பியூட்டி வோர்ல்ட் பிளாசா

S$165 மில்லியன் மதிப்பில் விற்பனைக்கு வரும் பியூட்டி வோர்ல்ட் பிளாசா

படம்: சாவ்பாவ்

13 Oct 2026 - 7:37 pm

1 mins read

பல பயன் கட்டடமான பியூட்டி வோர்ல்ட் பிளாசா $165 மில்லியன் மதிப்பில் விற்பனைக்கு விடப்படுகிறது. ஒரு சதுர அடியின் விலை $2,231 என்று சொத்து நிர்வாக ஆலோசனை நிறுவனமான இடிசி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) தெரிவித்துள்ளது.

எட்டுத் தளங்களைக் கொண்ட கட்டடத்தின் மொத்த பரப்பளவு 24,817 சதுர அடி. கட்டடத்தின் முதல் மூன்று தளங்களில் கடைகளும் அதற்கு மேற்பட்ட தளங்களில் வீடுகளும் உள்ளன.

999 ஆண்டு குத்தகை உரிமை கொண்ட கட்டடம், நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2025 பெருந்திட்டத்தின்கீழ், வர்த்தக, குடியிருப்புப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அது 3.0 மொத்த நிலப்பரப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

அந்த மேம்பாட்டுத் திட்டத்தின் குடியிருப்புப் பகுதியில் குறைந்தபட்சம் 35 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அலகுகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட 108 வசதிமிக்க வாடகைவீடுகளை (சர்வீஸ் அப்பார்ட்மென்ட்) உருவாக்குவதற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று இடிசி சொன்னது.

“வழக்கமான மறுமேம்பாட்டுத் திட்டங்களைத் தாண்டி, வாங்குபவர் தற்போதுள்ள கட்டடத்திலேயே சொத்து மதிப்பு உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுபற்றி பரிசீலிக்கலாம்,” என்று இடிசி நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசனைப் பிரிவின் தலைவர் சுவீ ‌‌‌ஷாவ் ஃபெர்ன் கூறினார்.

“கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இச்சொத்து அமைந்திருப்பது, கல்விச் சூழலைச் சார்ந்தவர்களுக்கான விடுதிகள், இணை-வாழிடங்கள், பிற தங்கும் வசதிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்