தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடக்கில் உள்ள நோயாளிகளுக்குப் படுக்கைக்கான காத்திருப்பு நேரம் குறைவு

2 mins read
5c326024-71a6-45fe-b0ae-5b79989d459b
மே 2024ல் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை திறக்கப்பட்டதிலிருந்து கூ டெக் புவாட் மருத்துவமனையின் படுக்கை நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டது.  - படம்: சாவ்பாவ்

அண்மையில் கூ டெக் புவாட் மருத்துவமனை அதன் அவசர சிகிச்சைப் பிரிவின் தாழ்வாரங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட தள்ளுவண்டி படுக்கைகளில் நோயாளிகளைப் பராமரித்து வந்தது.

2010ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரே பொது மருத்துவமனையாக இருந்த அதில், நோயாளிகள் நிரம்பி வழிந்ததால், சில நோயாளிகள் தள்ளுவண்டி படுக்கைகளிலேயே சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

மே 2024ல் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை திறக்கப்பட்டதிலிருந்து கூ டெக் புவாட் மருத்துவமனையின் படுக்கை நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டது.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் அதிகரித்து வரும் குடியிருப்பாளர்களுக்குக் கூடுதல் வசதியை வழங்குவதற்காக, கூ டெக் புவாட் மருத்துவமனையில் கூடுதலாக 500 முதல் 800 படுக்கைகள் சேர்க்கப்பட்டன. அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“முன்பு இது மிகவும் குழப்பமான நிலையில் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இனி தள்ளுவண்டி படுக்கைகள் இல்லை,” என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஜோ சிம் கூறினார்.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக, செப்டம்பர் 25ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு முறையான நேர்காணல் அளித்துப் பேசிய பேராசிரியர் சிம், 2024ஆம் ஆண்டு இந்தக் குழுமத்தில் சேர்ந்ததிலிருந்து மருத்துவமனைகளில் வேலைப்பளு அதிகமில்லாமல் பார்த்துக்கொள்ளும் ஒருங்கிணைப்பை தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளார்.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் இங்குள்ள மூன்று பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் ஒன்றாகும். இந்தக் குழுமத்தின் மூன்று பிரதான மருத்துவமனைகளாக கூ டெக் புவாட், உட்லண்ட்ஸ் ஹெல்த், டான் டோக் செங் ஆகியவை உள்ளன. இவை சிங்கப்பூரின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

மற்ற இரண்டு சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களான சிங்ஹெல்த், தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம்ஆகியன முறையே சிங்கப்பூரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வசிப்பவர்களைக் கவனித்துக்கொள்கின்றன.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தினுள் மருத்துவமனை படுக்கைகளை மேலும் அதிகரிக்க திட்டங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு, உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அதன் 500 படுக்கைகள் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 900 ஆக உயர்த்தப்படும். தேவைப்பட்டால் 1,400 படுக்கைகளாக விரிவுபடுத்தப்படலாம். இதற்கிடையே, 2030க்குப் பிறகு டான் டோக் செங் மருத்துவமனை அதன் 2,000க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் கூடுதலாக 600 படுக்கைகளைச் சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்