ஜூரோங் வெஸ்ட்டில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய தேனீக் கூட்டம்

ஜூரோங் வெஸ்ட்டில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய தேனீக் கூட்டம்

படம்: யாகூ

17 Nov 2026 - 6:56 pm

2 mins read

நவம்பர் 15ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட்டில் மின்-சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர், தேனீக்களால் பலமுறை கொட்டப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணின் வருங்கால கணவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் ஒருவர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டதன் மூலம் இந்தச் சம்பவம் பொதுவெளியின் கவனத்திற்கு வந்தது.

அவர் தெரிவித்த தகவலின்படி, ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 41, ஜூரோங் லேக் லிங்க் சந்திப்பில்தான் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

தனது வருங்கால மனைவி தேனீக்களால் தாக்கப்பட்டு, உடல் முழுவதும் பலமுறை கொட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“சாதாரணமாகத் தொடங்கிய ஒரு பயணம், தேனீக்கள் துரத்தவும், உடல் முழுவதும் பலமுறை கொட்டப்படவும் நேரிட்டதால், ஒரு பயங்கரமான அனுபவமாக மாறியது,” என்று அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

‘மதர்ஷிப்’ ஊடகத்தின் வினாக்களுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நவம்பர் 15ஆம் தேதி காலை சுமார் 11.20 மணியளவில் ஜூரோங் லேக் லிங்க் பகுதியில் உதவி கோரி அழைப்பு வந்ததாகத் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரை இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தனது வருங்கால மனைவிக்கு வாந்தி, தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக அந்த நபர் தெரிவித்தார். பல இடங்களில் கொட்டியதால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அந்த நபர் தனது பதிவில், ‘லேக் கிராண்டே’ குடியிருப்பு வளாகத்தின் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். உதவி கேட்டுச் சென்ற தனது வருங்கால மனைவிக்கு அவர்கள் உடனடியாக உதவினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41-ஐச் சுற்றியுள்ள பகுதியை ஆய்வு செய்தபோது, ​​ஒரு மரத்தின் மீது சுமார் 20 மீட்டர் உயரத்தில் ஒரு தேன்கூட்டைக் கண்டறிந்ததாகத் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

அந்தத் தேன்கூடு பின்னர் நவம்பர் 16ஆம் தேதி மதியம் சுமார் 1.30 மணியளவில் அகற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தேனிசைக்கிள்தாக்குதல்

தொடர்புடைய செய்திகள்