சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் மாற்றத்திற்குப் புதிதானவர் அல்ல. தமது 37 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான்கு பிரதமர்களுக்குக் கீழ் அவர் பணியாற்றியுள்ளார்.
1988ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த திரு சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினராகக் களமிறங்கிய பின்னர் அமைச்சரானார்.
அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வலையொளிக்குக் கொடுத்த நேர்காணலில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) வெற்றிக்கான காரணங்களில் மாற்றத்திற்கு மாறிக்கொண்டதும் ஒன்று என்று குறிப்பிட்டார்.
“இவ்வளவு காலம் மக்கள் செயல் கட்சி வெற்றிகரமாகச் செயல்படுவதற்குக் காரணம் அது தொடர்ந்து மாற்றங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொண்டதுதான். வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்பத் தொடர்ந்து செயல்பட அது முக்கியமானதாக இருந்தது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
“பல கட்சிகள் நீண்ட காலம் நிலைக்கவில்லை, அவர்கள் தங்களுக்கு எதன்மூலம் வெற்றி கிடைத்தது என்பதை அறிந்து அதை மட்டுமே தொடர்ந்து செய்துவந்தனர். காலம் மாறமாற அவர்கள் தங்களது பாதையிலிருந்து மாறவில்லை இது அவர்களுக்குப் பின்னடைவைத் தந்தது,” என்றார் திரு சண்முகம்
அரசாங்கம் காலத்திற்கு ஏற்பத் தொடர்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் வெற்றிபெறமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்த திரு சண்முகம் தமது 29வது வயதில் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
தற்போது தமது ஒன்பதாவது பொதுத் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் சண்முகம் நீ சூன் குழுத்தொகுதியில் களமிறங்குகிறார். அவர் 2011ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

