தேசிய அடையாளம் மட்டுமே முக்கியமானதாக இராது: மூத்த அமைச்சர் லீ

தேசிய அடையாளம் மட்டுமே முக்கியமானதாக இராது: மூத்த அமைச்சர் லீ

2 mins read
6e39c238-8c95-4c03-ac4e-1c9484ec0a53
மாணவர்கள், கல்வியாளர்கள் என ஏறத்தாழ 800 பேர் பங்கேற்ற தேசிய பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கில் சிங்கப்பூரின் தேசிய அடையாளம் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு உரையாற்றினார் மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: பெரித்தா ஹரியான்

எண்ணற்ற இடர்களைத் தலைமுறைகளாகச் சிங்கப்பூரர்கள் கடந்துசெல்கையில், தேசிய அடையாளம் வலுவாக வளர்ந்திருந்தாலும் பல சிங்கப்பூரர்களுக்கு அதுவே ஒரே அல்லது மிக முக்கியமான அடையாளமாக இருக்காது என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங்  தெரிவித்துள்ளார்.

தேசியப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) அன்று அவர்  உரையாற்றினார்.

திரு லீ, இனம், சமயம் போன்ற பிற அம்சங்களும் மக்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளை வடிவமைக்கின்றன என்றும் அதை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.

“பலருக்கு, சிங்கப்பூரராக இருப்பது முக்கியம். ஆனால், அவர்களது அடையாளத்தின் மிக முக்கியமான பகுதியாக அது இருக்காது; மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் தெரிவித்தார் திரு லீ.

மாணவர்கள், கல்வியாளர்கள் என ஏறத்தாழ 800 பேர் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கில் சிங்கப்பூரின் தேசிய அடையாளம் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு உரையாற்றினார் திரு லீ.

சிங்கப்பூரர்களின் அடையாளத்தில் தேசிய அடையாளம்  மிக முக்கியமான பகுதியாகத் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டு இருந்தாலும், சிங்கப்பூரர்களில் அதிகளவிலானோர் சமயத்தைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகக் காண்பதை சுட்டிக் காட்டியிருந்தது கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைய ஆய்வு ஒன்று.

“தேசிய அடையாளம் வலுவானது என்று சொல்ல இயலும்; ஆனால் அதே நேரத்தில், நாம் அனைவரும் நம் அடையாளத்தில் வெவ்வேறு அடுக்குகள் கொண்டிருப்பதால், நாம் சேர்ந்த ஒரே இனக்குழு அதுமட்டும் என்று அல்ல,” என்றும்  திரு லீ கூறினார்.

இனம் மற்றும் சமயத்தைத் தவிர, குறிப்பாக மூத்த தலைமுறையினருக்கு மொழியும் முக்கியமானது என்று குறிப்பிட்ட திரு லீ, மக்களின் நட்பு வட்டத்தையும் உலகம் சார்ந்த அவர்களின் கண்ணோட்டங்களை வடிவமைக்கும் அரசியல் நம்பிக்கைகள், தனிப்பட்ட உறவுகளிலும் மக்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருக்கலாம் என்றார்.

“எனவே, இவை அனைத்தும் நாம் ஒரே மக்கள் என்பதை அறிந்திருக்க வேண்டிய இதர அம்சங்கள்; ஆனால் நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல; நாம் அறிந்திருக்கவும் மதிக்கவும் வேண்டிய வேறுபாடுகள் நம்மிடையே உள்ளன.

“உலகமயமாக்கல் தேசிய அடையாள உணர்வுக்குப் பெரிய சவாலாக இருக்குமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அரங்கில் பதிலளித்தார் திரு லீ.

“உலகளாவிய முன்னேற்றங்களும் ‘வலிமைமிக்க வெளிப்புற சக்திகளும்’ அவ்வப்போது தேசத்தை வெவ்வேறு திசைகளில் இழுக்கும் என்று சுட்டிய திரு லீ, “நம் பணி அதை எதிர்ப்பது; மேலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: ‘ஆம், நான் முஸ்லிம், அல்லது நான் சீனர், அல்லது நான் இந்தியன், ஆனால் நான் சிங்கப்பூரரும் கூட’ என்பதாகும்,” என்று மேலும் விளக்கினார்  மூத்த அமைச்சர் லீ.

குறிப்புச் சொற்கள்