வளர்ச்சியின் பலன்கள் விளிம்புநிலை மக்களைச் சென்றடைய வேண்டும்: துணைப் பிரதமர்

வளர்ச்சியின் பலன்கள் விளிம்புநிலை மக்களைச் சென்றடைய வேண்டும்: துணைப் பிரதமர்

2 mins read
3ba979c4-dd4d-4ab8-b57e-2e4f686cd8e3
தேசியத் தொண்டூழியம் மற்றும் அறக்கொடை நிலையத்தின் ‘நல்லதோர் நிறுவனம்’ இயக்கத்தின் 10வது ஆண்டு விழாவில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் சிறப்புரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாட்டின் பொருளியலும் வணிகங்களும் முன்னேறிச் செல்லும்போது, குறைந்த வருமானக் குடும்பங்கள், மூத்தோர், உடற்குறையுள்ளோர் போன்ற நலிவுற்ற பிரிவினர் சமுதாயத்தில் பின்தங்கிவிடக் கூடாது என்று துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் வலியுறுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை (ஜூலை 20) மாலை நடைபெற்ற தேசியத் தொண்டூழியம், அறக்கொடை நிலையத்தின் ‘நல்லதோர் நிறுவனம்’ (கம்பெனி ஆஃப் குட்) இயக்கத்தின் 10வது ஆண்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

‘‘வேலைவாய்ப்பு பாதிப்பு, சமத்துவமின்மை, உணவுப் பாதுகாப்பு போன்ற பெரிய சவால்களை ஒரு நிறுவனம் தனித்து நின்று தீர்த்துவிட முடியாது. இன்றைய சூழலில், தனியாகச் செயல்படும் நிறுவனங்களைவிட, மற்றவர்களுடன் இணைந்து சமுதாயத்திற்குப் பங்காற்றும் நிறுவனங்களே நீண்டகால வெற்றியைப் பெறுகின்றன,’’ என்றார் அவர்.

இதற்கு உதாரணமாக, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் சங்கம், சிங்கப்பூர் உணவு வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, இதர நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் திரு கான் சுட்டினார். 

நிகழ்ச்சியில், தங்களின் சிறந்த சமூகப் பங்களிப்பிற்காக 63 ‘சாம்பியன்ஸ் ஆஃப் குட்’ நிறுவனங்கள் உட்பட மொத்தம் 481 அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டன.

‘நல்லதோர் நிறுவனம்’ இயக்கத்தின்கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 1,046 வணிக நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 384 மில்லியன் வெள்ளி நிதியுதவியாகவும் $85 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளன. அத்துடன், 1.1 மில்லியனுக்கும் அதிகமான மணிநேரங்களைத் தொண்டூழியத்திற்காகச் செலவிட்டுள்ளன.

வணிக நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்தைத் தாண்டி, தேவையுள்ள சமூகத்தினருடன் நீடித்த கூட்டுறவை ஏற்படுத்த வேண்டும். ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளிகளை ஒன்றிணைத்து, சமுதாயத்தில் ஆக்ககரமான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று திரு கான் கேட்டுக்கொண்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களின்போது ஊழியர்களைப் புறக்கணிக்காமல், அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நிறுவனங்கள் நீண்ட காலத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்க முடியும் என்றும் துணைப் பிரதமர் கான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கான் கிம் யோங்நிறுவனம்