லிபியா-ஆயுதத் தடையை மீறியதாக ஐநா கூறியதை மறுத்தது பெங்குயின்

லிபியா-ஆயுதத் தடையை மீறியதாக ஐநா கூறியதை மறுத்தது பெங்குயின்

படம்: சாவ்பாவ்

18 Nov 2026 - 7:52 pm

2 mins read

லிபியாவுக்கான ஆயுதத் தடையை மீறியதாக ஐக்கிய நாட்டு வல்லுநர் குழு கூறியதைச் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள ‘பெங்குயின் இன்டர்நேஷனல்’ கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்துள்ளது.

விற்கப்பட்ட இரண்டு கப்பல்களும் வர்த்தகப் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டவை எனவும் ஆயுதங்களின்றி வழங்கப்பட்டவை எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

துபாயைச் சேர்ந்த ‘2020 வால்யூம் போட்ஸ்’ நிறுவனத்திற்கு 2024ஆம் ஆண்டு டிசம்பரில் பாதுகாப்புக் கப்பலொன்றும் தரையிறங்கும் கப்பலொன்றும் விற்கப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட பங்குச் சந்தை அறிக்கையில் பெங்குயின் குறிப்பிட்டது.

சிங்கப்பூரிலுள்ள அதன் தளத்திலிருந்து வழங்கப்பட்ட அவ்விரு கப்பல்களும் பின்னர் லிபியாவின் பெங்காசிக்கு அனுப்பப்பட்டன.

ஐக்கிய நாட்டு வல்லுநர் குழு, இவ்வாண்டு மார்ச் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பெங்குயினையும் அதன் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான பெங்குயின் ஷிப்யார்ட் ஏ‌ஷியாவையும் குறிப்பிட்டது.

பாதுகாப்புக் கப்பலைக் கடற்படை வகை விரைவுக் கண்காணிப்புக் கப்பலாகவும் தரையிறங்கும் கப்பலை இருவகைப் பயன்பாட்டுக் கப்பலாகவும் குழு வகைப்படுத்தியிருந்தது.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானம் 1970ன்கீழ் விதிக்கப்பட்ட ஆயுதத் தடையின் மீறலாக இதை அக்குழு கருதியது. ஆயினும், தடை உத்தரவு எதனையும் அது பரிந்துரைக்கவில்லை.

கப்பல்கள் குறித்த வகைப்பாட்டையும் விதிமீறல் முடிவையும் ஏற்பதற்கில்லை எனப் பெங்குயின் கூறியது. அவ்விரு கப்பல்களும் ஆயுதங்களோ வெடிபொருள்களோ இல்லாமல் வழங்கப்பட்டதாக அது வலியுறுத்தியது.

2025 ஜனவரி முதல் மே வரை ஐக்கிய நாட்டுக் குழு கேட்ட தகவல்களை வழங்கியதாகவும், அறிக்கை வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில்தான் அதுகுறித்துத் தெரியவந்ததாகவும் நிறுவனம் கூறியது.

அதன் விளைவுகளை மதிப்பிடுவதற்காகச் சிங்கப்பூர்ச் சட்ட ஆலோசகரையும் அனைத்துலகத் தடைகள் பற்றி விவரமறிந்த நிபுணரையும் நியமித்ததாகவும் அது தெரிவித்தது.

கிடைக்கப்பெற்ற ஆலோசனையின்படி, அறிக்கையில் பெயர் இடம்பெற்றிருப்பது தானாகவே தடை நடவடிக்கையாகவோ நேரடி அபராதமாகவோ அமையாது என்று பெங்குயின் கூறியது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பெங்குயின் அல்லது அதன் துணை நிறுவனத்திற்கு எதிராக ஐநா தடைகளை விதிப்பதற்கான சாத்தியம் குறைவு என்பதும் நிறுவனத்திற்குத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கப்பல்களின் ஏற்றுமதி குறித்து சென்ற ஆண்டு நவம்பர் முதல் சிங்கப்பூர்ச் சுங்கத்துறையுடன் பெங்குயின் தொடர்பில் இருக்கிறது.

இந்த விவகாரம் செயல்பாடுகளைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் தற்போதைய நிலையில் குறிப்பிடத்தக்க நிதிப் பாதிப்பு எதுவும் இருப்பதாகத் தனது இயக்குநர் குழுவிற்குத் தெரியவரவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்