சிங்கப்பூரில் உள்ள பென்கியூ நிறுவனம், ஜிவி31 என்ற படம் காட்டும் மின்சாதனக் கருவியை மீட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளது. கருவியில் உள்ள மின்கலன் சூடாகித் தீப் பிடிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஜிவி31 கருவிகள் மீட்டுக்கொள்ளப்படுவதாகச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்ப் பொருள் பாதுகாப்பு அலுவலகம் செவ்வாய்கிழமை (ஜூன் 2) தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள், ஜிவி31 கருவியில் வேறொரு மின்கலனை மாற்றுவதற்கும் அதன் மென்பொருளை மேம்படுத்துவதற்கும் பென்கியூ நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம். புதிய ஜிவி32 கருவிக்கும் அவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று பென்கியூ அறிக்கை வெளியிட்டது.
அதுதொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் அது குறிப்பிட்டது.
பென்கியூ நிறுவனத்தின் ஜிவி31 கருவி 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஜிவி32 கருவி கடந்த ஆண்டு வெளியீடு கண்டது.
வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஜிவி31 கருவிகளும் மீட்டுக்கொள்ளப்படுவதாகப் பென்கியூ சொன்னது.


