சிங்கப்பூரின் ஆகச் சிறந்த முதலாளி: ஆப்பிள் மீண்டும் முதலிடம்

2 mins read
a136818e-a6ed-4395-a2f3-0f14eb952b00
தி ஷாம்ப்ஸ் ஏட் மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஆகச் சிறந்த முதலாளி என்ற பெயரைத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ஏஷியா பசிபிக் புரூவரிஸ் சிங்கப்பூர் (ஹய்னக்கன் ஏஷியா பசிபிக்), பிஎம்டபிள்யூ குரூப் ஏஷியா, தி லெகோ குரூப், ஜிஎஸ்கே ஆகியன முறையே இரண்டாம் முதல் ஐந்தாம் இடங்களில் வந்தன.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸும் உலகளாவிய ஆய்வு நிறுவனமான ஸ்டட்டிஸ்டாவும் இணைந்து தொகுத்த பட்டியலில் இந்நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

‘சிங்கப்பூரின் ஆகச் சிறந்த முதலாளிகள் 2025’ எனும் அப்பட்டியல், குறைந்தது 200 ஊழியர்களைக் கொண்டுள்ள தலைசிறந்த 250 நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்துகிறது.

2024 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வகுக்கப்பட்டது. தகுதிபெறும் ஊழியர்கள் தங்களது சொந்த நிறுவனத்தையும் அதே துறையில் மற்ற நிறுவனங்களையும் பரிந்துரைத்தனர்.

இந்த ஆய்வில், 27 துறைகளில் ஏறக்குறைய 2,000 நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 14,000 ஊழியர்கள் பங்கெடுத்தனர்.

ஆக அதிகமான முதலாளிகளைக் கொண்டது அரசாங்கச் சேவைத் துறை. அமைச்சுகள் அரசாங்க ஆணைபெற்ற கழகங்கள் இதில் அடங்குகின்றன. தலைசிறந்த 250ல் 24 நிறுவனங்கள் அத்துறையைச் சேர்ந்தவை என ஸ்டட்டிஸ்டா பகுப்பாய்வாளர் வூ ருவோ யியாங் தெரிவித்தார்.

அரசாங்கச் சேவைத் துறையில் முதலிடம் வகிப்பது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை. மொத்த பட்டியலில் இது 81வது நிலையில் வந்தது. அதற்கு அடுத்த நிலைகளில் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியும் (83வது இடம்) தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் (90வது இடம்) வந்தன.

கடந்த ஐந்தாண்டுகளில் இப்பட்டியலில் இடம்பெறும் அரசாங்கச் சேவைத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதை திருவாட்டி வூ சுட்டினார்.

“உலகளவில் அரசாங்க உன்னதத்துக்கான சிங்கப்பூரின் நற்பெயரே இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்றார் அவர்.

அரசாங்கச் சேவைத் துறை ஊழியர்கள் தங்கள் பணியில் அர்த்தமும் மனநிறைவும் காண்பதால் அத்துறை எழுச்சி பெற்றிருக்கலாம் என மூத்த நிபுணர் சுவேச்சா மொகபத்ரா கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்