சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகிவரும் வேளையில், சுற்றுலாக்கள், நடவடிக்கைகள், இலவச அனுகூலங்கள் என்று பலதரப்பட்ட திட்டங்களை வகுத்துள்ளன தீவெங்கும் உள்ள ஹோட்டல்கள்.
தேசிய தின அணிவகுப்பில் மனத்தைக் கவரும் எத்தனையோ அங்கங்கள் இருந்தாலும் வாணவேடிக்கைக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு. ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒத்திகைகளின்போது வாணவேடிக்கையைக் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் வாணவேடிக்கையில் சிறப்பம்சமாக வானில் ‘60’ என்ற எண் தோன்றுகிறது. மரினா பே சேண்ட்ஸிலிருந்து அந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தெளிவாகக் காண முடியும்.
அதை முன்னிட்டு மரினா பே, பாடாங் ஆகியவற்றைச் சுற்றியுள்ள ஹோட்டல் அறைகளைப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக வாணவேடிக்கையைத் தெளிவாகப் பார்க்க வகை செய்யும் அறைகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது.
பாடாங்கிற்கு மிக அருகில் அமைந்துள்ள ஹோட்டல்களில் ஒன்று விண்டம் சிங்கப்பூர் ஹோட்டல் (Wyndham Singapore Hotel). கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த ஹோட்டலின் புதுப்பிப்புப் பணிகள் பிப்ரவரியில் நிறைவடைந்தன. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கான ஹோட்டலின் பே வியூ (Bay View) அறைகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
அதேபோல கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் (Grand Copthorne Waterfront) ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை அறிவித்த எஸ்ஜி60 திட்டம், ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி முழுமையாக விற்று முடிந்துவிட்டது.
தேசிய தினத்துக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் எஸ்ஜி60 சலுகைகள் வழங்கும் இந்த ஹோட்டல்களையும் மக்கள் நாடலாம்.
கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டல் சிங்கப்பூர் (Grand Copthorne Waterfront Hotel Singapore)
ஹேவ்லாக் எம்ஆர்டி நிலையத்திலிருந்து இரண்டு நிமிடம் நடந்தால் ஹோட்டல் வந்துவிடும். சிங்கப்பூர் ஆற்றைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் ஹோட்டலின் பிரிமியர் வாட்டர்ஃபிரண்ட் அறைகளிலிருந்தும் கிளப் ஓய்விடத்திலிருந்தும் வாணவேடிக்கையைப் பார்க்க முடியும்.
தொடர்புடைய செய்திகள்
‘Lets Celebrate SG60: National Day Fireworks & Staycation’ திட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து இரண்டு இரவு தங்குவதற்கான திட்டத்தை ஹோட்டல் வழங்குகிறது. அதில் நான்கு வகை இரவு உணவுடன் இலவச யோகா வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், ஹோட்டலில் தங்குவோருக்கு $10 வெள்ளி நிரப்புதொகையுடன் கூடிய இரண்டு ஈஸிசி-லிங்க் அட்டைகள் வழங்கப்படும். தேசிய தினக் கருப்பொருளைக் கொண்ட சாக்லெட், மெகரோன்ஸ் ஆகியவற்றையும் அவர்கள் பெறுவர்.
ஹோட்டலில் தங்க ஓர் இரவுக்கான கட்டணம் $410. மேல் விவரங்களுக்கு str.sg/yWsC பக்கத்தை நாடலாம்.
த ரிட்ஸ்-கார்ல்டன், மில்லெனியா சிங்கப்பூர் (The Ritz-Carlton, Millenia Singapore)
வானுயர்ந்த கட்டடத்துக்குப் பெயர் பெற்ற த ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மரபுடைமையை அடிப்படையாகக் கொண்ட தொகுப்பை வழங்குகிறது.
ஹோட்டலின் டீலக்ஸ் காலாங், கிரேண்ட் காலாங், கிளப் காலாங், டீலக்ஸ் சுவிட், கிளப் டீலக்ஸ் சுவிட் ஆகிய அறைகளைத் தேர்ந்தெடுத்தால் எதிர்வரும் வார இறுதிகளில் வாணவேடிக்கையைப் பார்த்து ரசிக்கலாம்.
பெரனாக்கான் அரும்பொருளகத்திலிருந்து கையால் செய்யப்பட்ட செராமிக் கோஸ்டர், மைலோ, பண்டுங், பாண்டான் ஆகிய ருசிகளில் வரும் சாக்லெட் பிரலைன்ஸ் உணவுப் பொருள் போன்றவற்றை ஹோட்டலின் தொகுப்புத் திட்டத்தை வாங்குவோர் பெறுவர்.
இருவருக்கான காலை உணவுடன் கடைசி நாளில் பிற்பகல் 3 மணி வரை ஹோட்டலில் இருக்க விருந்தினர் அனுமதிக்கப்படுவர். சிங்கப்பூரின் துடிப்புமிக்க உணவுக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிங்க பொம்மையும் வழங்கப்படும்.
அதோடு பிறந்த நாளில் 6 என்ற இலக்கத்தைக் கொண்டோரும் 1965ஆம் ஆண்டு பிறந்தோரும் இலவசமாகப் பெரிய அறைக்கு மாற்றப்படுவர்.
இந்த ஹோட்டலில் ஓர் இரவு தங்குவதற்கான கட்டணம் $600. மேல் விவரங்கள் str.sg/JRrzM இணையப்பக்கத்தில்.
பேன் பசிபிக் சிங்கப்பூர் (Pan Pacific Singapore)
மரினா பே வட்டாரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள 38 மாடி உயரம் கொண்ட பேன் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டல் வாணவேடிக்கையைப் பார்ப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
எக்சகியூடிவ் மரினா பே அறை, பசிபிக் கிளப் அறை, பெனோரமிக் சுவிட் ஆகிய மூன்றிலும் அறைகளிலிருந்தபடியே வாணவேடிக்கையைப் பார்க்கலாம்.
இரண்டு அறைகளையும் இணைக்கும் ‘த ஃபேமிலி ஃபன் டுகெதர்’ (The Family Fun Together) தொகுப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
தொகுப்புத் திட்டத்தில் ஓர் இரவுக்கான கட்டணம் $900லிருந்து தொடங்குகிறது. மேல்விவரங்களுக்கு str.sg/DEok பக்கத்தை நாடலாம்.
த ஃபுல்லர்டன் ஹோட்டல் சிங்கப்பூர் (The Fullerton Hotel Singapore)
‘SG60: To Singapore, With Love package’ என்ற தொகுப்பின் மூலம் காலனித்துவ பிரம்மாண்டமான த ஃபுல்லர்டன் ஹோட்டலில் இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தங்கலாம்.
தேசிய தினக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை உள்ளுர்த் திண்பண்டங்களை அளவின்றி வழங்குகிறது இந்த ஹோட்டல்.
மரினா பே வியூ அறை, எஸ்பிளனேட் அறை, லோஃப்ட் சுவிட், ஃபுல்லர்டன் சுவிட் ஆகியவற்றிலிருந்து வாணவேடிக்கையை ரசிக்கலாம். 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு இலவசப் பனிக்கூழ், வண்ணம் தீட்டும் புத்தகம், வண்ணம் தீட்டும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும்.
இரண்டு மணி நேர மரபுடைமைச் சுற்றுலாவையும் ஹோட்டல் விருந்தினர் தேர்வு செய்யலாம்.
இந்த ஹோட்டலில் தங்க ஓர் இரவுக்கான கட்டணம் $450. மேல்விவரங்களுக்கு str.sg/9aQm பக்கத்தை நாடலாம்.
சுவிஸொட்டெல் த ஸ்டாம்ஃபர்ட் சிங்கப்பூர் (Swissotel The Stamford Singapore)
மரினா பே, பாடாங் ஆகியவற்றுக்கு எதிரில் இருக்கும் சுவிஸொட்டெல், தேசிய தின அணிவகுப்பின் வாணவேடிக்கையை மிகத் தெளிவாகப் பார்ப்பதற்கான சிறந்த தளங்களில் ஒன்று.
மரினா பேயை நோக்கியுள்ள அறைகள் மட்டுமல்லாமல் 70வது மாடியில் உள்ள ஸ்காய் உணவகத்திலிருந்தும் வாணவேடிக்கையைக் காண முடியும்.
சுவிஸொட்டெலும் ஃபேர்மொன்ட் சிங்கப்பூர் ஹோட்டலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் பே ஸ்டேகேஷன் தொகுப்பை வழங்குகின்றன.
இந்த ஹோட்டலில் தங்க ஓர் இரவுக்கான கட்டணம் $520. str.sg/w4JM5 மேல்விவரங்களைப் பெறலாம்.